பழிவாங்கும் படலத்தில் ‘கூலி’ தேவா தீர்த்துக் கட்டினாரா?: திரை விமர்சனம்

யாருமேயில்லாத ஒரு கூலித்தொழிலாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவனுக்கு தன் தங்கையையும் மணமுடித்து வைத்த ஒரு நல்ல மனுஷன், திடீரென எதிராளிகளால் செத்துப் போயிட்டா; அந்தக் கயவர்களை என்னங்க பண்ணலாம்? இதான்ங்க படத்தோட கதைக்கரு.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில், தங்கக்கடத்தலில் ஈடுபடுகிறார் (நாகர்ஜுனா) சைமன். இவருக்கு வலதுகையாக இருப்பவர் (சவுபின் சாகிர்) தயாள்.

போலீசுக்கு தகவல் சொல்பவர்களைக் கொன்று, உடல்களை அப்புறப்படுத்துவதில் இவர்களுக்கு சிக்கல் நேர்கிறது. மேலும், தனது கேங்ஸ்டர் கூட்டத்தில் போலீஸ் உளவாளி இருப்பதும் சைமனுக்கு தெரிய வருகிறது.

இதற்கிடையே, தனது நண்பர் (சத்யராஜ்) ராஜசேகர் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வரும் (ரஜினிக்கு) தேவாவுக்கு, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதை உணர்கிறார். பின்னர், அவரது மகளான (ஸ்ருதிஹாசன்) ப்ரீத்தி துணையுடன் ராஜசேகரை கொன்றவர்களை கண்டுபிடித்து பழி தீர்க்கிறார்.

இச்சூழலில், சைமனின் ஸ்பாட்டுக்கு தேவா செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்போது, துறைமுகத்தில் கொல்லப்படுபவர்களின் உடல்களை, தான் கண்டுபிடித்த நவீன நாற்காலி மெஷின் மூலமாக ராஜசேகர் சாம்பலாக்கி அப்புறப்படுத்தி வந்தது தேவாவுக்கு தெரிய வருகிறது. மேலும், ராஜசேகரை சைமன் ஆட்கள்தான் கொலை செய்தனர் என்பதும் தெரிய வருகிறது.

ராஜசேகரை, சைமன் கொலை செய்தது ஏன்? நண்பனின் மரணத்திற்கு தேவா பழி தீர்த்தாரா? இவர்களின் பின்னணி நிலவரம் என்ன? என்ற பல கேள்விகளுக்கு விடையாக பயணிக்கிறது மீதிக்கதை..

எளிமையாக அறிமுகமாகும் ரஜினி, தனது ஒவ்வொரு அசைவுகளாலும் வலிமையாய் வசீகரிக்கிறார். ‘சிகிட்டு’ பாடலில் எக்ஸலெண்ட் எனர்ஜியாய் அசத்தியிருக்கிறார்.

‘குறிப்பாக, 30 ஆண்டுகளுக்கு முன்பு’ என வரும் ஏஐ தொழில்நுட்ப ரஜினி தோற்றம், அபாரம். ரசிகர்களுக்கு ஹை லெவல் ட்ரீட். இதனை அதிகப்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

‘சைமன்’ நாகர்ஜுனா செம ஸ்டைலிஸ்டாக மிரட்டியிருக்கிறார். வெகு இயல்பான மேனரிஷங்களால் எமகாதகனாய் வில்லத்தனம் செய்வது அட்டகாசம். இவர், எதிராளிகளை கொலை செய்யும் வழிமுறை பதற வைக்கும் திரில்லிங் சம்பவம்.

சிறப்புத் தோற்றத்தில் அமீர்கான், உபேந்திரா கவனிக்க வைக்கிறார்கள். ‘மோனிகா’ என்ற ஒரேயொரு பாட்டில் குத்தாட்டம் போட்டு அனைவரது நெஞ்சிலும் குடிபுகுந்து, கிக்கேற்றி விட்டுச் செல்கிறார் பூஜா ஹெக்டே.

சத்யராஜின் நையாண்டி பேச்சு அருமை. சவுபின் சாகிரின் யூகிக்க முடியாத தேர்ந்த நடிப்பு பாராட்டுக்குரியது.

அலட்டல் இல்லாத எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ‘ப்ரீத்தி’ கேரக்டரில் வரும் ஸ்ருதி, மிகச் சிறப்பு. சத்யராஜின் மகளாக வரும் இவர், பின்னர் ரஜினியின் மகள் என தெரிய வருவது டேர்னிங் ட்விஸ்ட்.

முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி பரபரவென ஓடி, ரத்தச்சேறாய் தெறிக்க விட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தனது எல்சியூ.வில் இல்லாமல் ரஜினிக்காக தனிக்கதையாக உருவாக்கி இருக்கிறார். இந்த சினிமாட்டிக்கில், டன் கணக்கில் தீப்பொறி; செம செம கொலவெறி ஏற்றியிருக்கிறார். அப்படியே வர்ற மாஸான திரில்லிங் இன்டர்வெல், வேற லெவல்.

கிரீஷ் கங்காதரனின் கேமரா, ஸ்கிரீன் ப்ளேவுக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது. அனிருத்தின் பிஜிஎம் தனி முத்திரையுடன் அதிர வைக்கிறது. ஃபைட் சீன்ஸ் வடிவமைப்பில் அன்பறிவ் அதகளப்படுத்தி இருக்கிறார்கள்.

மொத்தத்தில், வழக்கமான பழிவாங்கும் கதைக்களம் தான். அதனை ஸ்கிரீன்ப்ளே மேக்கிங்கில் புதுப்பித்திருக்கிறார்; ரொம்ப கலர் மாற்றி, காரமாய் கலக்கியிருக்கிறார் லோகேஷ். ரசிக்கலாம்.!

50%

கூலி திரை விமர்சனம்

  • Rating
aamir khanAnirudh RavichanderCoolieCoolie Movie ReviewCoolie ReviewLokesh KanagarajNagarjunaSuperstar RajinikanthUpendraகூலிகூலி திரை விமர்சனம்கூலி விமர்சனம்