சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் ’மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பிலேயே விஷால் – இயக்குநர் ரவி அரசு இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதனால், சில காட்சிகளை விஷாலே இயக்கி வந்தார். இதனைத் தொடர்ந்து படத்தில் உள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பேசி இருவருக்கும் இடையே பிரச்சினையை சரி செய்தார்கள்.
அதற்குப் பின்பும் விஷால் – ரவி அரசு இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறது. இதனால் ‘மகுடம்’ படத்தின் முழு இயக்குநர் பொறுப்பையும் விஷாலே ஏற்றிருக்கிறார். அப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் என்று மட்டுமே ரவி அரசுவின் பெயர் இடம்பெற இருக்கிறது.
‘மகுடம்’ படப்பிடிப்பு தளத்தில் ரவி அரசு இல்லாமல், விஷாலே இயக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
ஒரே கட்டமாக படப்பிடிப்பினை முடிக்க திட்டமிட்டு தொடங்கினார்கள். தற்போது சில முக்கியமான காட்சிகளை தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டது படக்குழு.