‘பைசன் காளமாடன்’ களத்தில் வென்றானா? தோற்றானா?: திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் பணியாற்றியவர் ராம். இவரிடம் பணியாற்றிய மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படம் இயக்கி கவனம் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ உதயநிதி-வடிவேலு நடிப்பில் ‘மாமன்னன்’ மற்றும் ‘வாழை’ என தனித்த முத்திரையை தொடர்ந்தார்.

பணம்- புகழைக் கடந்து என் மக்களுக்காக நல்லவை சொல்ல விழைகிறேன் என்ற முனைப்பில் இவர் உருவாக்கி தற்போது வெளியாகி இருக்கிறது ‘பைசன் காளமாடன்’

அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த மணத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் வந்திருக்கிறது. இதன் விமர்சனம் பார்ப்போம்..

கபடி விளையாட்டில் சாதிக்கத் துடிக்கிறார் துருவ் விக்ரம் (கிட்டான்). இதற்கு பள்ளிக்கூட விளையாட்டு ஆசிரியர் மதன்குமார் உறுதுணையாக இருக்கிறார். ஆனால், கபடி ஆட்டத்தில் கவனம் செலுத்துவது துருவ்வின் அப்பா பசுபதிக்கு (வேலுச்சாமிக்கு) பிடிக்கவில்லை.

இந்நிலையில், ஊருக்குள் சாதி பிரச்சினைகள் துருவ்வின் முன்னேற்றப் பாதைக்குத் தடைக்கற்களாய் நிற்கின்றன. ஒருபுறம் அமீர் (பாண்டியராஜ்) மறுபுறம் லால் (கந்தசாமி) ஆகிய இருவருக்கும் சாதி ரீதியான மோதல் வெடிக்கிறது. இதில், ஒவ்வொரு தரப்பினரும் ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்யப்படுகின்றனர்.

இருப்பினும், தடைக்கற்களையே படிக்கற்களாக்கி கபடியில் சாதிக்கும் துருவ், ஒரு கட்டத்தில் சாதிப் பிரச்சினைக்குள் தானும் சிக்கிக் கொள்கிறார். இதில், அவரின் கை உடைக்கப்படுகிறது. மேலும் கொடுமைகள், அவமானங்கள், இழப்புகள் சூழ்கிறது. இத்தகு போராட்டங்களைச் சந்திக்கும் துருவ் கடைசியில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே மீதிக்கதை.

திருநெல்வேலி வட்டார மொழியில் ஆடு மேய்ப்பது, முள் வெட்டுவதென கிட்டான் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் துருவ். கடின உழைப்பில் நிமிர்ந்திருக்கிறார். அனுபமாவின் நளின நடிப்பும் சிறப்பு. இவர்களுக்குள் நிகழும் காதல் வசீகரிக்கப்படவில்லை. செயற்கையாக திணிக்கப்பட்டதுபோல இருக்கிறது.

அப்பா ஸ்தானத்தில் வரும் பசுபதி, கபடி ஆட்டத்தில் வெற்றி பெற்ற தன் மகனைப் பார்த்து கண் கலங்கும்போது நெகிழ வைக்கிறார்.

படத்தில் அமீர், லால், ரஜிஷா விஜயன், ஆகியோர் அவரவர் பங்களிப்பை மிக இயல்பாய் கொடுத்துள்ளனர். மேலும், எழில் அரசுவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் நிவாஸ்.கே.பிரசன்னாவின் தேர்ச்சியான இசையும் கெத்தான திரைக்கதைக்கு சத்தாக வலுவூட்டி இருக்கின்றன.

முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவிக்கையில், ‘தென்மாவட்ட இளைஞர்களின் வாழ்வையும் ஏக்கத்தையும் கனவையும் வலிகளையும் சேர்த்து புனையப்பட்ட ஒரு திரைக்கதையாக சித்தரிக்கப்பட்டாலும், அனைத்தும் என் ஆன்மாவின் புனைவே தவிர, யாரையும் எந்த நிகழ்வையும் உண்மையாக கட்டப்படவேயில்லை என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்’ என்றார். அதுபோலவே, இந்தக் கலைப் படைப்பில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில் படம் எப்படி இருக்குன்னா.. உலக சினிமா வேறு, சினிமா உலகம் வேறு. வியாபாரம் வேறு, வியாக்கியானம் வேறு. சொல்பவர் ஆயிரம், வெல்பவர் சிலர். அவ்வகையில் ‘பைசன் காளமாடன்’ தென்னகத்து திமிலாய் களத்தில் வென்றிருக்கிறான். வரவேற்போம், மாலை சூடுவோம்.!

70%

பைசன் காளமாடன் திரை விமர்சனம்

  • Rating
‘பைசன் காளமாடன்’AmeerAnupama ParameswaranAnurag AroraAruvi MadhanAzhagam PerumalBison Kaalamaadan reviewBison reviewDhruv VikramLalMari SelvarajPasupathyRajisha Vijayanபைசன் காளமாடன் திரை விமர்சனம்