புத்தாண்டுக்கு மீண்டும் வெளியாகிறது ‘பைரவா’

2027 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நடிகரும் தமிழக முதல்வருமான விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த இப்படம், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2027 ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு விருந்தாக ரசிகர்களைச் சந்திக்கவுள்ளது.

விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027 புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தை மீண்டும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இப்படத்தை SIM Cine International நிறுவனம் வெளியிடுகிறது.

இயக்குநர் பரதன், இதற்கு முன்பு விக்ரம் நடித்த ‘தில்’, ‘தூள்’, விஜய் நடித்த ‘கில்லி’, ‘மதுரா’, அஜித் நடித்த ‘வீரம்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர். மேலும், விஜய் நடிப்பில் வெளியான ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அந்த வகையில், விஜய்யுடன் அவர் மீண்டும் இணைந்த திரைப்படம் ‘பைரவா’.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற ‘பட்டைய கெளப்பு’, ‘நிலாயோ’, ‘பா பா’, ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக உள்ளன.

- Advertisement -

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த ‘பைரவா’, வெளியான முதல் சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்ததாகக் கூறப்பட்டது. விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாகவும் இப்படம் அமைந்தது.

திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் மூலம் இப்படம் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சமயங்களில் கிடைக்கும் பார்வையாளர் வரவேற்பு, படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும், 2017-ம் ஆண்டு இப்படம் வெளியானபோது சிறுவர்களாக இருந்த விஜய் ரசிகர்கள், தற்போது இளைஞர்களாக வளர்ந்துள்ளனர். தங்களுக்குப் பிடித்தமான ‘பைரவா’ படத்தை மீண்டும் பெரிய திரையில் கொண்டாட அவர்களுக்கு இந்த மறுவெளியீடு ஒரு வாய்ப்பாக அமையவுள்ளது. அதேபோல், அப்போது திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

2027 ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டின் முதல் நாளிலேயே விஜய்யின் ‘பைரவா’ திரையரங்குகளுக்குத் திரும்புவதால், ரசிகர்கள் இந்த மறுவெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ‘பைரவா’வுடன் தொடங்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்!

actress keerthy sureshBairavaaBairavaa to Re-Release on New Year 2027vijay