புராணக் கதை பின்னணி​யில் ஏ.ஐ. மூலம் உரு​வான ‘அவிரா’

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் தற்போது திரைப்படத் துறையிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. அந்த வரிசையில், முழுக்க முழுக்க Photo Realistic AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகும் முழுநீள திரைப்படமாக ‘அவிரா’ உருவாகி வருகிறது.

சுமார் 70-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ள பிரபாகரன், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை கணேஷ் மற்றும் ஜெகதீஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

முழு திரைப்படத்தையும் Photo Realistic AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியிருப்பது இந்திய சினிமாவில் முதல் முயற்சி என படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய திரைப்பட உலகில் புதிய தொழில்நுட்ப மைல்கல்லை ‘அவிரா’ பதிக்கவுள்ளது.

படம் குறித்து இயக்குநர் பிரபாகரன் கூறுகையில், “‘அவிரா’ என்றால் ‘பிரபஞ்சத்தின் பேரொளி’ என்று பொருள். புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்த பேண்டஸி திரைப்படமாக இதை உருவாக்கியுள்ளோம். Photo Realistic AI தொழில்நுட்பத்தின் மூலம் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் இந்தப் படம் அமையும்” என்றார்.

மேலும், பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘அவிரா’ தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக உள்ளதாகவும், விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

AviraAvira An AI Created Fantasy Film Inspired by Mythology