பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் கோலிவுட்டில் அவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு, தற்போது வரவேற்பு பெற்று வருகிறது.
கோலிவுட்டில் முன்னதாக ரஜினியின் ’தர்பார்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ மூலம் மீண்டும் களம் இறங்கியுள்ளார் முருகதாஸ். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. விறுவிறுப்பாக கட் செய்யப்பட்ட ட்ரெய்லர் படம் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.
காதல் ஒரு பக்கம், ஆக்ஷன் ஒரு பக்கம், ஹீரோவுக்கு இருக்கும் பிரச்சினை என கதைக்களம் ‘கஜினி’யை நினைவூட்டுகிறது. மேக்கிங் ஸ்டைல் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தை ஞாபகப்படுத்துகிறது. கதையென்ன என்ன, ரசிகர்களை கவர்ந்ததா என பொறுத்திருந்து பார்ப்போம்.