ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ள திரைப்படம் ‘அமெரிக்க ஆவி’. காமெடி ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
200-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் தமிழர்கள்!
‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் நெப்போலியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் அமெரிக்காவில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களில் பலர் மென்பொருள் பொறியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்துள்ளார். வினு படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்ள, இந்து ராஜ்குமார் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். முழுவதுமாக அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையுடன் உருவாகியுள்ள இப்படம், விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘வழக்கமான ஹாரர் படமாக இருக்காது!’ – குணால் நெப்போலியன்
விழாவில் பேசிய தயாரிப்பாளர் குணால் நெப்போலியன், ‘அமெரிக்க ஆவி’ திரைப்படம் வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தைத் தரும் என்றார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடம் ஏராளமான திறமைகள் இருப்பதை இப்படத்தின் மூலம் உணர முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், தங்களுடைய அன்றாடப் பணிகளுக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி அனைவரும் படத்தில் பணியாற்றியதாகத் தெரிவித்தார்.
மேலும், படத்தின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘ஆவி’ என்பது பேய் என்பதை மட்டும் குறிக்கவில்லை என்றும், அமெரிக்காவில் பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறி முயற்சியால் வெற்றி பெற்றவர்களையும் குறிக்கும் வகையில் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பேய், பிசாசு அம்சங்களுடன் சுவாரஸ்யமான பல விஷயங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- Advertisement -
75 நாட்களில் உருவான திரைப்படம்!
நடிகர் நெப்போலியன் பேசுகையில், இப்படத்தில் நடித்துள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி நடித்ததாகக் குறிப்பிட்டார். அவர்களுக்குப் பயிற்சி அளித்து, படப்பிடிப்பைத் திட்டமிட்டு நடத்தி 75 நாட்களில் படத்தை உருவாக்கியதாகத் தெரிவித்தார்.
மேலும், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்படத்தில் பங்கேற்றுள்ளதாகக் கூறிய அவர், இது வித்தியாசமான பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
திரையுலகப் பிரபலங்கள் பாராட்டு!
விழாவில் கலந்துகொண்ட பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, படத்தைப் பார்த்ததாகவும், புதுமுகங்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்து அவர்களிடமிருந்து நடிப்பைப் பெற்றிருப்பது கடினமான பணி என்றும் பாராட்டினார். இப்படம் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தை நினைவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
நடிகர்கள் நாசர், தயாரிப்பாளர் டி. சிவா, நடிகை ரோஜா செல்வமணி, நடன இயக்குநர் கலா, பாடலாசிரியர் சினேகன், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலரும் நெப்போலியனுடனான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நடிகர் நாசர் பேசுகையில், நெப்போலியனுடனான தனது நட்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்வதாகக் குறிப்பிட்டார். மேலும், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் குறைவாக உருவாகும் சூழலில், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக ‘அமெரிக்க ஆவி’ இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.
நடன இயக்குநர் கலா, இப்படம் வெறும் ஆவி தொடர்பான திரைப்படம் மட்டுமல்ல; அழகான குடும்பத் திரைப்படம் என்றும் பாராட்டினார்.
நகைச்சுவை, திகில் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.