ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்த வரிசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹைக்கூ’. இளமைத் துள்ளல், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்துள்ளனர்.
145 விநாடிகள் நீளும் டிரெய்லரில் கல்லூரி கலாட்டா, காதல், கலர்ஃபுல் காட்சிகள் மற்றும் நகைச்சுவை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் ஒரே ஒரு மாணவனாக மனோ சேரும்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.
முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ள ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோரின் கெமிஸ்ட்ரி டிரெய்லரில் கவனம் ஈர்க்கிறது. ‘கோர்ட்: ஸ்டேட் Vs நோபடி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீதேவி, இயல்பான நடிப்பால் கவர்கிறார். அதேபோல் ஃபெமினா ஜார்ஜின் தோற்றமும் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
- Advertisement -
‘ஹைக்கூ’ குறித்து நடிகர் ஏகன் கூறுகையில், “இது ஒரு ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம். அதே நேரத்தில் ஆண்களின் பெண்கள் மீதான பார்வை எப்படி மாற வேண்டும் என்பதையும், பெண்களை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் படம் பேசுகிறது. ஆனால், எந்தக் கருத்தையும் போதிக்கும் வகையில் படம் இருக்காது. கதைக்குள் கருத்தை இயல்பாக இணைத்து, ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளோம். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.
இப்படத்தில் அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பிரணீஷ்.பி படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். பிரேம் கருந்தமலை கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பி. சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.