நடிகை தேவயானி இயக்குனராகி, படத்திற்கும் விருதும் பெற்றிருக்கிறார். இது குறித்த முழு விவரம் காண்போம்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தேவயானி சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். இவர், தற்போது முதன்முறையாக, எழுதி இயக்கி தயாரித்துள்ள குறும்படமான ‘கைக்குட்டை ராணி’ 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில்,சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்க, எடிட்டர் பி.லெனின் படத்தொகுப்பை கவனிக்க, ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ்.ஒலி வடிவமைப்பையும் செய்துள்ளனர்.
சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. அதாவது, தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது.
‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தை பார்த்த 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவினர் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருதுக்கு, இந்த குறும்படத்தை தேர்ந்தெடுத்து, தேவயானி மற்றும் குழுவினரை பாராட்டியுள்ளனர்.
இது குறித்து பேசிய தேவயானி, ‘எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம், சர்வதேச அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.
‘கைக்குட்டை ராணி’ குறும்படத்தில் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன்.என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த குறும்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை ‘உலக சினிமா’ பாஸ்கரன் ஏற்றுள்ளார்.
இதேபோல், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்டத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருது சீனு ராமசாமிக்கு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த திரைப்படம் என்ற விருதையும் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேவயானி திரைப்படம் இயக்குவது எப்போது? ஹீரோ-ஹீரோயின் யார்? என ஆர்வத்துடன் ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர். பதில் சொல்வாரா?