நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமியை முன்னிட்டு, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைக்கும் 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார்.
‘அயலி’ இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அனுமோல். அனைவரும் சமம் என்ற எண்ணத்தைக் கொண்ட இவர், தன்னைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ரசிகர்களுக்கு ‘Always Choose Kindness’ என்ற வாசகத்துடன் கையெழுத்திட்டுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் அனுமோல், தனது மனிதநேயச் செயல்பாடுகள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
அண்மையில் நடிகை அனுமோலைச் சந்தித்த ரசிகர்கள், நவராத்திரி விழாவில் குடும்பத்திற்காக உழைத்து, பொருளாதாரச் சுதந்திரத்துடன் சுய அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட பெண்களைத் தேர்வு செய்து பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கலாம் என ஆலோசனை தெரிவித்தனர். இதற்கு அனுமோலும் உடனடியாகச் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னை கொளத்தூரில் உள்ள ஸ்ரீ செல்வ லட்சுமி திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட 50 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகை அனுமோல், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவர்களுடன் கலந்துரையாடினார்.
- Advertisement -
நிகழ்ச்சியில் பேசிய அனுமோல், “இங்கு வந்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் எனது வணக்கமும் நன்றியும். குடும்பத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைப்பது எளிதான காரியமல்ல. எந்த நேரத்திலும் எதிர்பாராத சம்பவங்கள் நிகழக்கூடும் என்ற சூழலில் ஆட்டோ ஓட்டுவது மிகுந்த சவாலானது. குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், தன்னம்பிக்கையுடன் சொந்தக் காலில் நின்று சுயமரியாதையோடும் தனித்த அடையாளத்தோடும் வாழ நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது.
என்னைப் பொறுத்தவரை அனைவரும் சமம். பெண்கள் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருப்பதுடன், ஆரோக்கியம் மற்றும் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உறுதி செய்யப்பட வேண்டும். பெண்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, எந்தப் பாகுபாடுமின்றி மனிதநேயத்துடன் வாழ்வது அவசியம்.
உருவம், நிறம் அல்லது மொழியின் அடிப்படையில் யாரேனும் உங்களைச் சிறுமைப்படுத்தினால், அதைப் புறந்தள்ளிவிட்டு உங்கள் லட்சியத்தை நோக்கி மன உறுதியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இந்தச் சிறப்பான நாளில் உங்கள் அனைவருடனும் கலந்துரையாடுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு பெண் ஆட்டோ ஓட்டுநரையும் தனித்தனியாகச் சந்தித்த அனுமோல், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவர்களின் குடும்பச் சூழல் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் பவானி பேசுகையில், “இதற்கு முன்பும் பல தொண்டு நிறுவனங்கள் எனக்கு உதவி செய்துள்ளன. ஆனால், எங்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு இன்சுலேட்டட் தண்ணீர் பாட்டில்கள், தரமான நாப்கின்கள், பவர் பேங்க், முதலுதவிப் பெட்டி ஆகியவற்றை வழங்கியதுடன், சுவையான உணவும் அளித்து எங்களைக் கௌரவித்ததை வாழ்நாளில் மறக்க முடியாது. ஐ லவ் யூ மேடம்!” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.