‘ஊக்குவிக்க ஆளிருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்’ என்பது போல கலைஞர்களை ஊக்கப்படுத்துவதே மனமுவந்து வந்து, தெரிவிக்கும் கைத்தட்டலும் பாராட்டும் தானே.! ஆம்.. பல பிரபலங்களை திரும்பிப் பார்க்க வைத்த ‘அமரன்’ பட விஷயத்திற்கு வருவோம்.. வாங்க..
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல் தயாரிப்பில் உருவான திரைப்படம் அமரன். இப்படம் வரும் தீபாவளி ரிலீசாக அக்டோபர் 31-ம் தேதி ரிலீசாகவுள்ளது.
ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு, சாய் பல்லவி ஜோடியாகியுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே அமரன் படத்தின் பிரமோஷன்களையொட்டி, கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, படத்தின் பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், டிரெயிலர் மிரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் சென்சார் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.
படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் நெப்போலியன் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பாராட்டியுள்ளார். ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் மத்திய பகுதி திருச்சியிலிருந்து வந்த சிவகார்த்திகேயன், நடிச்சி இவ்வளவு சீக்கிரம் மேலே வந்துள்ளதை பாராட்ட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு மற்றவர்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சினிமாவில் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு சிவகார்த்திகேயன் நடித்த படம், டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமாக உள்ளது. இதனால், மற்றவர்கள் அதைவிட சிறந்த படத்தை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, சிவகார்த்திகேயன் மீது பொறாமைப்படுவது, இழிவாகப் பேசுவது சரியில்லை என்றும் கேட்டுக்கொண்டார்.
தன்னுடைய மகன் தனுஷின் திருமணத்தில் பிசியாக உள்ள போதிலும் சிவகார்த்திகேயனுக்காக நெப்போலியன் குரல் கொடுத்துள்ளது திரைத்துறையினர் உள்பட இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘கற்றாரை கற்றாரே காமுறுவர்’. ஆதலால், பாராட்டுவோம்.. பாராட்டப்படுவோம்.!