ஹிந்தியை விட, தமிழ் தான் சிறப்பு: அல்லு அர்ஜூன் பேச்சு..
‘புஷ்பா-2 டிரைலரில் ஹிந்தி வெர்ஷனை விட , தமிழ் வெர்ஷன் டப்பிங் தான் சிறப்பாக உள்ளது’ என நடிகர் அல்லு அர்ஜூன் கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:
புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்து கொண்டே இருந்ததால், படம் தியேட்டரிலேயே கிட்டத்தட்ட ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா மிகவும் கவர்ச்சியான ஆட்டம் போட்டதால், அந்த பாடலைப் பார்க்கவும் ரசிகர்கள் தியேட்டரில் அலைமோதினர். தியேட்டர் வசூல் மட்டும் இல்லாமல் ஓடிடி பிஸ்னஸ் என படம் நல்ல லாபம் பார்த்தது.
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தினைப் பொறுத்தவரையில், படத்தினை மாபெரும் இந்திய சினிமாவாக மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதால், படத்திற்கான புரோமோசன் சிறப்பாகவே செய்து வருகின்றனர்.
புஷ்பா-2 படத்திற்காக அல்லு அர்ஜூன் ரூ. 300 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகின்றது. படத்தில் நடிகை ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளது ட்ரைலரில் தெறிக்கிறது.
டிரைலரைப் பொறுத்தவரையில் சில நாட்களுக்கு முன்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில், பாட்னாவில் ரசிகர்கள் முன்னிலையில் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டதால், படக்குழுவினரைக் காண ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர். டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், படத்தின் டிரைலர் குறித்து படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தெரிவித்த கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, ‘எனக்கு தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளுமே தெரியும். நான் எனது படங்களில் டிரைலர் வெளியாகும்போது, அவற்றை அனைத்து மொழிகளிலும் பார்ப்பேன்.
குறிப்பாக, தெலுங்கில் இருப்பதைப்போல் சிறப்பாக டப் செய்துள்ளார்களா எனப் பார்ப்பேன். அந்த வகையில், ஹிந்தி வெர்ஷனை விட, தமிழ் வெர்ஷன் டப்பிங் தான் சிறப்பாக உள்ளது. தெலுங்கில் இருக்கும் சில நுணுக்கமான விஷயங்கள்கூட தமிழ் வெர்ஷனில் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
‘முண்டாசுக் கவிஞன்’ பாரதி முழங்கியது போல.. ‘யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழிபோல் இனிதானது எங்கும் காணோம்’ என்பதே நிதர்சனம்.!