அல்லு அர்ஜுனை மட்டும், குற்றம் சாட்டுவது நியாயமானது அல்ல: துணை முதல்வர் பவன் கல்யாண்..
திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் பலியானது தொடர்பாக, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியது பற்றிக் காண்போம்..
‘அல்லு அர்ஜுன் திரையரங்கம் சென்றதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது’ என தெலங்கானா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். அவர் கூறியதாவது:
‘தேவையின்றி ஒரு பிரச்சினை சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலில் அடிப்படையில் இருந்து வளர்ந்து வந்து தலைவரானவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. திரைத்துறைக்கு அவர் ஆதரவாக தான் செயல்பட்டுள்ளார்.
டிக்கெட் விலை ஏற்றம், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி போன்றவற்றினால் சலார், புஷ்பா 2 திரைப்படங்கள் பலன் பெற்றுள்ளன. புஷ்பா 2 பட வெற்றியில் அவரது பங்கு முக்கியமானது.
அல்லு அர்ஜுன் விவகாரத்தில் என்ன நடந்தது என்ற முழு விவரம் என்னிடம் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம். பாதுகாப்பு சார்ந்த போலீஸாரின் கருத்தை திரையரங்க நிர்வாகம் அல்லு அர்ஜுன் வசம் முன்னதாக தெரிவித்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை அவரது குழுவில் இருந்து யாரேனும் ஒருவர் விரைந்து அணுகி இருக்க வேண்டும்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவாகவும், பக்க பலமாகவும் அனைவரும் நிற்க வேண்டும். ஆரம்பத்தில் அதில் இருந்த தடங்கல்தான் மக்களை கொதிப்படைய செய்தது.
இந்த துயரில் அல்லு அர்ஜுனை தொடர்புப்படுத்தி, அவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைப்பது நியாயமானது அல்ல. இதனால் அவர் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார். சினிமா ஒரு கூட்டு முயற்சி.
முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பொறுப்பை உணர்ந்துதான் இந்த விவகாரத்தை கையாள்கிறார். சில நேரங்களில் சூழலை பொறுத்து முடிவு எடுக்க வேண்டியிருக்கும். சிரஞ்சீவி கூட திரையரங்குக்கு சென்று படம் பார்த்த நிகழ்வுகள் உண்டு. ஆனால், தனது அடையாளத்தை மறைத்து தனியாக அவர் செல்வது வழக்கம்’ என தெரிவித்துள்ளார்.