15 ஆண்டுகால இசைப் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட அனிருத்!

Web Ads

இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் தனுஷ் பாடிய ‘Why This Kolaveri Di’ பாடல் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்தின் முதல் பாடலான இது, வெளியான காலகட்டத்திலேயே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழ், ஆங்கிலம் கலந்த வித்தியாசமான வரிகளுடன் உருவான இப்பாடல், மொழிகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்ததுடன், இணையத்திலும் மிகப்பெரிய வைரல் ஹிட்டானது. தற்போது வரை யூடியூபில் 622 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், தனது 15 ஆண்டுகால இசைப் பயணம் குறித்து அனிருத் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “15 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் எங்களது முதல் பாடல் உலகிற்கு அறிமுகமானது. அன்றிலிருந்து இன்று வரை நிறுத்த முடியாத ஒரு பயணமாக அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. 15 ஆண்டுகால இசை, நினைவுகள், கொண்டாட்டங்கள் மற்றும் மாயாஜாலங்கள் நிறைந்த பயணம் இது.

தமிழில் தொடங்கி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளில் இசையமைத்ததுடன், சர்வதேசக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதையும், உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களின் அன்பைப் பெற்றதையும் பெருமையாகக் கருதுகிறோம்.

ஸ்ட்ரீமிங் சாதனைகள், உலகளாவிய இசை நிகழ்ச்சிகள், ரசிகர்களின் உற்சாகம் என ஒவ்வொரு தருணமும் நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்காத அளவுக்கு சிறப்பாக அமைந்தது.

Web Ad 2

குறிப்பாக 2026-ம் ஆண்டு ‘LIK’, ‘ஜனநாயகன்’, ‘DC’, ‘Paradise’, ‘ஜெயிலர் 2’ எனப் பல முக்கியப் படங்களின் மூலம் அமைந்த இசைப் பயணம், இந்த 15 ஆண்டுகாலக் கொண்டாட்டத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது.

மேலும், Albuquerque Records என்ற புதிய முயற்சியின் மூலம் இசைத்துறைக்கு எங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கவும், அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்தப் பயணத்தில் எங்களது பாடல்களைக் கேட்டவர்கள், கொண்டாடியவர்கள், ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் பயணம் எங்களுடையது மட்டுமல்ல; உங்களுடையதும் கூட. 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் எண்ணற்ற கனவுகளை நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது. மீண்டும் ஸ்டூடியோவுக்குச் செல்கிறோம். சிறந்தவை இனிமேல்தான் வரவிருக்கின்றன. இது வெறும் தொடக்கம்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவான ‘Why This Kolaveri Di’ பாடல் தொடங்கிவைத்த இந்த இசைப் பயணம், இன்று சர்வதேச அளவில் ரசிகர்களைக் கவரும் அளவுக்கு வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.