அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

Web Ads

அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் காதல், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, வரும் நவம்பர் 20 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இப்படம் சூர்யா மற்றும் இயல் என்ற காதல் ஜோடியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஒன்றாக இணைந்து அழகான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுடன் வாழும் இவர்களின் வாழ்க்கையில், எதிர்பாராத சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்கின்றன. இதனால் அவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறுவதுடன், காதல், நம்பிக்கை மற்றும் மன உறுதி என அனைத்தும் கடுமையான சோதனைகளை எதிர்கொள்கின்றன.

காதலை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன், பரபரப்பான சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. எதிர்பாராத சூழல்கள் ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தை எவ்வாறு மாற்றுகின்றன என்பதையும், தாம் நேசிக்கும் ஒருவருக்காக எந்த எல்லை வரை செல்ல முடியும் என்பதையும் இப்படம் உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறது.

இப்படம் குறித்துப் பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அசோக் செல்வன், “இரண்டு பேர் ஒன்றாக இணைந்து தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். இதுதான் இப்படத்தின் அடிப்படைக் கதை. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இப்படத்தில் பணியாற்றியது எனக்கு இந்தப் பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. திரையரங்குகளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது Sony LIV மூலம் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்றடைய இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Web Ad 2

இப்படத்தில் சபுமோன் அப்துசமத், கதிர்பாலு மற்றும் மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். திரைக்கதையை விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன் மற்றும் அசோக் செல்வன் இணைந்து எழுதியுள்ளனர். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

காதல், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்த ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை வரும் நவம்பர் 20 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.