அதிரடி ஆக்ஷனில் மிரட்டும் ராஷ்மிகா.. மைசா டீசர் வெளியானது!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய அதிரடி திரைப்படம் ‘மைசா’ (Mysaa). இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
“நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் தொடங்கும் டீசரில், சமூகத்தின் தடைகளை எதிர்த்து தனியொரு போராளியாக களமிறங்கும் பெண்ணாக அவர் தோன்றுகிறார். போராளியாக மட்டுமல்லாமல், போரின் போக்கையே மாற்றும் சக்தியாகவும் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்திற்காக தீவிர உடற்பயிற்சி மற்றும் சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். பைக் ரேசிங் மற்றும் நீருக்கடியில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளிலும் அவர் துணிச்சலாக நடித்துள்ளார். குறிப்பாக, கையில் அரிவாளுடன் நீருக்கடியில் அவர் தோன்றும் காட்சி கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இயக்குநர் ரவீந்திரா புல்லேவின் கற்பனைக்கு ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் பி. கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், சர்வதேச சண்டைப் பயிற்சியாளர் கெச்சாவின் ஆக்ஷன் வடிவமைப்பும், ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் வலு சேர்த்துள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் உருவாகியுள்ள ‘மைசா’, நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ராஷ்மிகா மந்தானாவுடன் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், சிவா கந்துகுரி, கார்த்திக் ரஞ்சனி, தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.