தி பாரடைஸ் படத்துக்கு டிரைலர் கிடையாது – நடிகர் நானி

Web Ads

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீடு குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர்.

தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசுகையில், “படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 24-ஆம் தேதி படம் வெளியாகும். படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்றார்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா கூறுகையில், “சிறிய தாமதம் ஏற்பட்டாலும், படத்தின் கிளிம்ப்ஸ், டீசர் மற்றும் பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இது தாய்-மகன் பாசத்தையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டத்தையும் மையமாகக் கொண்ட கதை. படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள். ரசிகர்கள் நேரடியாக திரையரங்கில் இந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதால் டிரெய்லர் வெளியிடவில்லை” என்றார்.

Web Ad 2

நடிகர் நானி பேசுகையில், “இரண்டு முறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்டதால் தயக்கம் இருந்தது. ஆனால், ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்களது பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளது. இது என் திரையுலக வாழ்க்கையில் மிகவும் கடினமான, சவாலான படமாக அமைந்தது. சண்டைக் காட்சிகளின்போது எனக்கும் சக நடிகர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன. எங்களது உழைப்பை திரையில் காண்பீர்கள்.

டீசரைப் பார்த்து இது வெறும் வன்முறைப் படம் என நினைக்கலாம். ஆனால், ‘தி பாரடைஸ்’ அழுத்தமான உணர்வுகளுடன் கூடிய அழகான தாய்-மகன் கதையைச் சொல்கிறது. ரசிகர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கும்” என்றார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதி பிரம்மாண்ட ஆக்‌ஷன் விருந்தாக படம் திரைக்கு வருகிறது.