ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் ‘பெத்தி’ படத்தின் வெளிநாட்டு விநியோகத்தை அறிவித்தது!

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தனது முதல் சர்வதேச விநியோக முயற்சியாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தை அறிவித்துள்ளது.
‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்கள் மூலம் இந்திய சினிமாவின் தரத்தையே மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது வெளிநாட்டு விநியோகத் துறையிலும் தனது தடத்தை பதிக்கத் தயாராகியுள்ளது. சமீபத்தில் சர்வதேச விநியோகத்தில் களமிறங்க இருப்பதாக அறிவித்திருந்த நிறுவனம், அதன் முதல் அதிகாரப்பூர்வ முயற்சியாக ‘பெத்தி’ படத்தை தேர்வு செய்துள்ளது.
2026ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘பெத்தி’, உலகளாவிய அளவில் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண் மணம் மிக்க கதைகளையும், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவங்களையும் ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவை தாண்டியும் உலக ரசிகர்களிடையே வலுவான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தற்போது ‘பெத்தி’ மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தையும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
பிரபல இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் இந்தப் படம், அதிரடியான ஆக்ஷன் பின்னணி, வலுவான கதைக்களம் மற்றும் ராம் சரணின் மாறுபட்ட தோற்றம் ஆகியவற்றால் ஆரம்பத்திலிருந்தே கவனம் ஈர்த்துள்ளது.
மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
ஹொம்பாலே ஃபிலிம்ஸ் ‘பெத்தி’ படத்தை சர்வதேச அளவில் விநியோகம் செய்ய இருப்பது ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
