பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ பட வெளியீட்டு தேதி மாற்றம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ (Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய காலதாமதமானதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதிகளில் படம் வெளியாகவில்லை. இறுதியாக ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைந்து ஒரு கலகலப்பான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், ‘எல்.ஐ.கே’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியீட்டு தேதி உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
