ஜூலையில் வெளியாகிறதா விஜய்யின் ‘ஜனநாயகன்’? தணிக்கை குழு சிக்கல்களுக்கு இடையே புதிய தகவல்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கை குழுவின் கெடுபிடிகளால் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் இப்படம், வரும் ஜூலை மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தணிக்கை குழு சர்ச்சை: இப்படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, மத்திய தணிக்கை வாரியம் மறு ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து படக்குழு நீதிமன்றம் சென்றது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, மார்ச் 17-ம் தேதி மறு ஆய்வுக் குழுவினர் படத்தைப் பார்த்தனர். இருப்பினும், தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம் இருப்பதாலும், தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏன் ஜூலை மாதம்? இப்படத்தைத் தயாரிக்கும் கேவிஎன் (KVN) நிறுவனம், நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘த டாக்ஸிக்’ (Toxic) படத்தையும் தயாரித்துள்ளது. ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ள அந்தப் படத்தின் பணிகளில் தற்போது நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. எனவே, ‘த டாக்ஸிக்’ வெளியான பிறகே ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் துரிதப்படுத்தத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜூன் மாத இறுதியில் தணிக்கை மற்றும் தேர்தல் தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும் பட்சத்தில், ஜூலை மாதம் ‘ஜனநாயகன்’ உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்து படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
