இந்தக் காலத்தில் நம்மைப் பற்றி நாமேதான் சொல்லிக் கொள்ள வேண்டும்: நடிகர் சித்து பேச்சு!

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. தொலைக்காட்சி நடிகர் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். “A Sidhu Investigation” என்ற டேக்லைனுடன் இப்படம் ஜூலை 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது.
படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, “இயக்குநர் கே. பாக்யராஜ் மறைவு மிகப்பெரிய இழப்பு. அந்த வேதனையோடு தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். இயக்குநர் பாலாஜி தனது நம்பிக்கையால் என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தார். உண்மையைச் சொன்னால், ட்ரெய்லர் பார்க்கும் வரை இந்தப் படத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இல்லை. ஆனால் ட்ரெய்லரை பார்த்த பிறகு இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது” என்றார்.
இயக்குநர் மித்ரன், “சினிமாவுக்கு எவ்வளவு கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு சினிமா நமக்குத் திருப்பிக் கொடுக்கும். இதுபோன்ற தரமான படங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு அவசியம்” என்று கூறினார்.
நடிகை ரித்விகா, “70 சதவீதம் படமாக்கப்பட்ட படத்தை கைவிட்டு, மீண்டும் அதே இடங்களில் முழுமையாக படமாக்கி வெளியீட்டிற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. இயக்குநர் பாலாஜியின் விடாமுயற்சியே இதற்கு காரணம்” என்றார்.
நடிகர் சித்து, “இன்றைய காலத்தில் நம்மைப் பற்றி நாமே சொல்லிக்கொள்ள வேண்டிய சூழல். ‘திருமணம்’ தொடருக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இந்தப் படம். இதில் நடித்த ஒவ்வொருவரிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன். ரசிகர்கள் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் பாலாஜி, “என் படத்தின் மீது சிலருக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அந்த சந்தேகங்களையெல்லாம் கடந்து படத்தை வெற்றிகரமாக முடித்துள்ளேன். இந்தப் படத்தின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
