15,000 Cops in New Year
15,000 Cops in New Year

15000 Cops in New Year – சென்னை: நாளை புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த குவிக்கப்பட்டுள்ளனர்.

ரிசார்ட், ஓட்டல் போன்ற இடங்களில் மாறு வேடத்தில் கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னையில் இன்று நள்ளிரவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என சென்னையே கோலாகலமாக இருக்கும்!

புத்தாண்டு பிறப்பதையொட்டி இரவு 9 மணியில் இருந்து மெரினா, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடற்கரை பகுதியில் சுமார் 3,050 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மெரினா , பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம் போன்ற கடற்கரையில் கொண்டாட்டம் என்ற பெயரில் இளம் பெண்களை தொந்தரவு செய்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக கடற்கரை பகுதியில் சுமார் 500 போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் ரிசார்ட்டுகள், பங்களாக்களையும் போலீசார் மாறுவேடத்தில் கண்காணிக்கவுள்ளனர்?!

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எவரேனும் அத்துமீறி செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மேலும் பைக் ரேஸ், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் வகையில் இன்று இரவு 9 மணி முதல் மறுநாள் காலை வரை சென்னை முழுவதும் மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அம்பத்தூர், மாதவரம், புளியந்தோப்பு, அண்ணாநகர், பூக்கடை, பரங்கிமலை ஆகிய பகுதிகளில் 368 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கையை போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

கோயில்கள், தேவாலயங்கள் கடற்கரைகள், முக்கியமான சாலைகள் என மொத்தம் 100 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், பாஸ்போர்ட், விசாவிற்கு போலீஸ் சான்றிதழ் வழங்கப்படாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் “மெரீனா கடற்கரை சாலையில் தான் ஏராளமானோர் கூடுவார்கள் என்பாதல் இன்றிரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.