
தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கட்டிடம் ஒன்று வரப்போகிறது: நடிகர் விஷால் உறுதி
நடிகர் சங்கக் கட்டிடம் குறித்து விஷால் கூறிய தகவல்கள் பார்ப்போம்..
சுந்தர்.சி இயக்கத்தில், 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து, தற்போது வெளியாகியிருக்கும்
‘மதகஜராஜா’ திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுடன் படத்தினை கண்டுகளித்தார் விஷால்.
இதனை தொடர்ந்து, தி.நகரில் நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகளையும் மேற்பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் பலரும் விஷாலிடம் நலம் விசாரித்தனர்.
அப்போது பேசிய விஷால், ‘இன்னும் 4 மாதத்தில் தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில், கட்டிடம் ஒன்று வரப்போகிறது. இங்கு வரும் ஆடிட்டோரியம் மிகச் சிறந்ததாக அமையப் போகிறது. இந்தக் கட்டிடம் இத்தனை ஆண்டுகள் கழித்து வரப்போகிறது என்றால், ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும்.
கடவுள் ஒரு வழி காட்டினால் தான் அதனை செய்ய முடியும். கடவுளின் ஆசிர்வாதத்தால் விரைவில் வர இருக்கிறது. சென்னைக்கு வரும்போது எப்படி எம்.ஜி.ஆர் சமாதியை பார்க்க ஆசைப்படுவார்களோ, அதேபோன்று நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்த்துவிட்டு போவோம் என்ற உணர்வு வரும் வகையில் இந்த கட்டிடம் அமையும்’ என்றார் விஷால்.
முன்னதாக, சில காலம் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நடைபெறாமல் இருந்தது. தற்போது விரைவில் பணிகளை முடிக்க மிக தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
