விஜய் ஆண்டனி தான் நடித்துக்கொண்டிருக்கும் “வள்ளி மயில்”  என்ற படத்திற்கான புதிய தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், அண்ணாதுரை, பிச்சைக்காரன் போன்ற அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டுதான். இதனைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்து வரும் படம் தான் “வள்ளி மயில்”. 

இந்தப் படத்தை நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, பாண்டிய நாடு போன்ற மக்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவில் பல படங்களை  இயக்கிய சுசீந்திரன் அவர்கள் இயக்கவுள்ளார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களாக சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். 

இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரித்துள்ளார். இதற்கு ஒளிப்பதிவாளராக விஜய் சக்கரவர்த்தியும் இணைந்திருக்கிறார். மேலும் டி. இமான் இசையில் உருவாகி வரும் இந்த படம் வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது.

 இந்நிலையில் படத்தின் புதிய தகவல் ஒன்றை விஜய் ஆண்டனி அவர்கள் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் “வள்ளி மயில்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்ற தகவலை அவரின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.