யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“டாக்ஸிக்” திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 26, 2026 அன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது!
ராகிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றான ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 ஆகஸ்ட் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய போஸ்டரில், யாஷ் ஏற்றுள்ள ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) என்ற இரு மாறுபட்ட கதாபாத்திரங்களின் தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன. இருண்ட உணர்வுகள், மர்மங்கள் மற்றும் அதிகாரப் போராட்டங்கள் நிறைந்த உலகை இந்த போஸ்டர் சுட்டிக்காட்டுகிறது. வழக்கமான குடும்ப உறவுகளை கொண்டாடும் போஸ்டர்களிலிருந்து விலகி, சிக்கலான உணர்வுகள் மற்றும் மறைந்திருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை குறிவைத்து வெளியாகும் இந்த திரைப்படம், வரமகாலட்சுமி விரதம், ஓணம், ஈத் மற்றும் ரக்ஷா பந்தன் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளை ஒட்டிய நீண்ட விடுமுறை காலத்தில் திரைக்கு வரவுள்ளது. இதனால் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை வெளியாகும் இந்த திரைப்படம், நீண்ட விடுமுறை வாரத்தின் பலனை முழுமையாக பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த வெளியீடு அமையும் என கூறப்படுகிறது.
இதுவரை வெளியிடப்பட்ட ஒவ்வொரு அப்டேட்டும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, வித்தியாசமான கதை சொல்லல் மற்றும் உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாகி வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் ராகிங் ஸ்டார் யாஷ் இணையும் முதல் திரைப்படமாக ‘டாக்ஸிக்’ உருவாகியுள்ளது. KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், இந்திய சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
படத்தின் நட்சத்திர பட்டியலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியீட்டிற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், உலகம் முழுவதும் ரசிகர்களின் கவனம் தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மீது திரும்பியுள்ளது. ஒவ்வொரு புதிய அறிவிப்பின் மூலமும் விரிவடைந்து வரும் படத்தின் உலகம், சர்வதேச அளவில் அதிகரித்து வரும் எதிர்பார்ப்பு மற்றும் பண்டிகை கால வெளியீடு ஆகியவை இணைந்து, ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’, 2026 ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
