லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் ‘தி ஒன் : வித்தின் யூ’ டைட்டில் டீசர் வெளியீடு!

Web Ads

ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் திரைப்படமான ‘தி ஒன் : வித்தின் யூ’ படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் தயாரிப்பில், ஆதிரன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கைகள் எதிர்பாராத சூழ்நிலைகளால் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை பின்னணியாகக் கொண்ட இப்படத்தின் கதை, சிவராத்திரி இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது. வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணிகளைச் சேர்ந்த நான்கு மனிதர்கள், விதியின் விளையாட்டால் ஒரே நிகழ்வில் சிக்கிக் கொள்வதையும், அதனால் ஏற்படும் பரபரப்பான திருப்பங்களையும் படம் பேசுகிறது.

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் பருத்திவீரன் சரவணன், பாவல் நவகீதன், நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கீதா கைலாசம், பிரவீன் ராஜா, ராஜீவ் ஆனந்த், கணேசன் களியமூர்த்தி, ஜே.எஸ். கவி, ஸ்ரீதர், ஆதிரா, பொற்கொடி, அனுபமா உன்னி, ஹீனா ரத்தோர், ஸ்மிருதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில், ஒளிப்பதிவை வினோத் ராஜா மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை சி.எஸ். பிரேம்குமார் கவனித்துள்ளார். கலை இயக்குநராக ஸ்ரீகாந்த் கோபால் பணியாற்றியுள்ள நிலையில், ஒலிப்பதிவு வடிவமைப்பை எம்.ஆர். ராஜகிருஷ்ணன் மேற்கொண்டுள்ளார்.

சஸ்பென்ஸ், ஆக்ஷன், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘தி ஒன் : வித்தின் யூ’, ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் மாற்றத்தை உருவாக்கும் சக்தியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள டைட்டில் டீசர், மர்மம் மற்றும் பதற்றம் நிறைந்த காட்சிகளால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் அடுத்தகட்ட அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.