தனது அப்பா, அம்மா, மற்றும் நளினி குறித்து ராமராஜன் மனம் திறந்து பேச்சு
தமிழ்த் திரையுலகில், தனித்தன்மையோடு முத்திரை பதித்து, உச்ச நட்சத்திரமாய் புகழ்பெற்றவர் ராமராஜன்.
இவர், நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
ஆயினும், 2000-ம் ஆண்டிலிருந்து இருவரும் பரஸ்பர புரிதலோடு தனித்தனியாக வாழ்ந்து வந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு, நல்ல பெற்றோராகவே இருக்கின்றனர். மகன் அருண் மற்றும் அருணா திருமணத்தில் ராமராஜன் கலந்து கொண்டார். நளினி டி.வி.சீரியல்களில் நடித்து வருகிறார்.
அன்றைய சூழ்நிலையில், (புளியங்குடி) கண்ணா சினி ஆர்ட்ஸ் சார்பில் செல்வபிரகாஷ், காமராஜ் ஆகியோர் தயாரிப்பில் ‘சீறி வரும் காளை’ என்ற திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்தார். பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சாமானியன்’ படம் வெளியானது.
இந்நிலையில், ராமராஜன் தனது இல்லற வாழ்வியலை பற்றி மனம் திறந்து பேசியதாவது: ‘என்னுடைய தந்தை ஒரு நாடக கலைஞர், ராஜபாட் ராமைய்யா என்றால் அனைவருக்கும் தெரியும். என் அப்பா, என் அம்மாவை பெண் பார்க்க சென்றபோது பெண் வீட்டார் வைத்த ஒரே கோரிக்கை, திருமணத்திற்கு பிறகு மாப்பிள்ளை நடிக்க கூடாது என்பதுதான். என்னுடைய அப்பாவுக்கு அம்மாவை பிடித்து விட்டதால், இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
அதன் பிறகு, பல்வேறு வேலைகளை செய்து எங்களுடைய குடும்பத்தை பார்த்துக்கொண்டார். இதுதான், பின் நாளில் என் வாழ்க்கையிலும் நடந்தது.
நான் திருமணம் செய்து கொள்ளும்போது வைத்த முதல் கோரிக்கை, நடிக்க கூடாது என்பதுதான். நான் ரிக்சா இழுத்துக்கூட காப்பாற்றுவேன். ஆனால், சினிமாவில் நடிக்கக்கூடாது என்று நளினியிடம் தெளிவாக கூறி விட்டுத்தான் திருமணம் செய்தேன். அப்போது நடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள்.
அன்றே இல்லை, நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தால், திருமணம் செய்து இருக்க மாட்டேன். மீண்டும் நடிப்பேன் என்று சொன்னபோது தான் பிரச்சினையே வந்தது.
நளினி மீண்டும் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டோம். அந்த கோவம் மனதில் இன்றும் இருக்கு. இருந்தாலும், மகன் மகள் திருமணத்திற்கு அழைத்தார்கள். அதற்கு, அப்பாவாக சென்றேன். ஆனால், இப்போது வரைக்கும் நான் நளினியுடன் பேசுவது இல்லை. மகன், மகளுடன் மட்டும்தான் பேசுவேன்’ என ராமராஜன் கூறியுள்ளார்.