
இது முற்றிலும் வதந்தி: கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்து அவரின் மகன் தகவல்
‘கே.ஜே.யேசுதாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என்று வெளியான தகவல் உண்மையில்லை என தெரிய வந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்..
85 வயதாகும் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 50,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்களை பாடிய பெருமையும் இவருக்கு உண்டு.
இந்நிலையில், இன்று காலை, யேசுதாசுக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை குறித்து தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவலை அவரின் மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். இது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளார். அதேபோல் பிஆர்ஓ தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில்,
‘பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நலமுடன் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் பின்னணி பாடகர் யேசுதாஸ் அவர்கள் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழகத்தில் செய்திகள் பரவியது. அதில் உண்மை இல்லை என்றும், அவர் பூரண நலத்துடன் இருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்’ என அவரின் உதவியாளர் சேது இயாள் தெரிவித்துள்ளார்.