‘சொர்க்கவாசல்’ படம் எப்படி இருக்கு?: ‘பப்ளிக்’ கூறிய கருத்துத் தொகுப்பு..
தமிழ்த்திரையில் காமெடியராய் வந்து, ஹீரோவாக நின்று, இயக்குனராகவும் பயணித்துக் கொண்டிருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கியுள்ள இவர், அடுத்ததாக சூர்யா-45 படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. அறிமுக இயக்குனர் சித்தார்த் இயக்கியுள்ளார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சித்தார்த். படத்தில் சானியா ஐயப்பன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது, ‘சொர்க்கவாசல்’ படம் எப்படி இருக்கு? என்பது குறித்து, திரை ஆர்வலர்கள் தெரிவித்த பதிவுகளைப் பார்க்கலாம் வாங்க..
* இயக்குனர் சித்தார்த் கூறியதுபோல, செய்யாத தவறுக்கு சிறை வாழ்க்கையில் இருப்பவனுக்கு வரும் ஏக்கம் என்னவாக இருக்கும்? விடுதலை எனும் சுதந்திரம் தான். அதுவே அவனுக்கு ஏக்கம். அதுதான் சொர்க்கவாசல். ஆம், மாறுபட்ட நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி கவர்கிறார். சிறந்த படமாக உருவாகியிருக்கிறது.
* 1999-ல் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த சொர்க்கவாசல். செய்யாத தவறுக்காக சிறையில் சிக்கிக்கொள்ளும் ஒரு கைதியை பற்றிய கதை தான் இது. இப்படத்தின் முதல் பாதி அருமையாக உள்ளது. இரண்டாம் பாதி தான் படத்திற்கு முக்கிய பங்காற்றி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பு அற்புதமாக உள்ளது. செல்வராகவன் நடிப்பும் அருமை.
* சொர்க்கவாசல் படத்தில் ஹீரோ, வில்லன் என யாரும் இல்லை. ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன் என அனைவரும் இயக்குனர் சித்தார்த்தின் கதையை நம்பி கதாபாத்திரங்களை கச்சிதமாக செய்துள்ளனர். 1999-ல் சென்னை சிறையில் நடந்த கதை. தொழில்நுட்ப ரீதியாக தனித்து நிற்கும் படம். காட்சியமைப்பு, இசை மற்றும் சண்டைக் காட்சிகள் அருமை. சினிமாவுக்காக எந்தக் காட்சியையும் மிகைப்படுத்தாமல் என்ன நடந்ததோ அதை கச்சிதமாக காட்டி இருக்கிறார். நல்ல முயற்சி.
* சிறந்த கிரைம் திரில்லர் படம் தான் இந்த சொர்க்கவாசல், முதல்பாதி எமோஷனலாகவும் இரண்டாம் பாதி சிறையில் நடக்கும் கொடூரத்தையும் கண்முன் காட்டுகிறது. ஆர்.ஜே.பாலாஜி ஒரு நடிகனாக தன்னுடைய இன்னொரு பரிணாமத்தை காட்டியுள்ளார். செல்வரகாவன் கேங்ஸ்டராக சிறப்பாக நடித்திருக்கிறார். ‘இறுகப்பற்று’ படத்துக்கு பின் சானியா ஐயப்பனின் பெஸ்ட் படம் இது. உண்மை கதையை எடுத்துள்ளனர்.
* சொர்க்கவாசல் படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார் என நம்பவே முடியவில்லை. 1999-ல் சென்னை சிறையில் நடந்த சம்பவத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்திருக்கிறார். படத்தின் மேக்கிங் டாப் கிளாஸ் ஆக உள்ளது. நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், கருணாஸ் என அனைவரின் நடிப்பும் அருமை. 137 நிமிடத்தில் விறுவிறுப்பான கதையுடன் சீரியஸான படம் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் படமாக இது இருக்கும்.
* சொர்க்கவாசல் ஜெயில் திரில்லர் படம். ராவாகவும் ரியலாகவும் உள்ளது. இதுவரை பார்க்காத ஆர்.ஜே,பாலாஜியை பார்க்க முடிகிறது. கிறிஸ்டோ சேவியரின் பின்னணி இசை சூப்பர். இயக்குனர் சித்தார்த் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்துள்ளார்.
* சுருக்கமாகச் சொன்னால், இது ஃபில்டப் விடுற ‘பான் இந்தியா’ படமல்ல; எதார்த்த வாழ்வியலை எடுத்துக் காட்டும் பலே படம்.!
இவ்வாறு, புதிய கதைக்களத்தில் உருவான ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்திற்கு பப்ளிக் ரிவ்யூ தரமாகவே அமைந்து வருகிறது.!