‘அமரன்’ படத்தில் வாழ்ந்த சிவகார்த்திகேயனுக்கு, இராணுவ வீரர்கள் கௌரவிப்பு..
‘ஆயிரம் கோடி பணத்தை விட, ஆகச் சிறந்த புகழொன்றே வரலாறாகும்’. ஆம், அப்படியொரு அரிய நிகழ்வு, அதுவும் சினிமாத் துறையில் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அது குறித்து காண்போம்..
மறைந்தும் மறையாத தமிழக இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்க்கையை மையப்படுத்திய ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்தில் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.
இத்தனை ஆண்டுகால திரைப் பயணத்தில், தற்போது உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையல்ல.
‘அமரன்’ வெளியாகி இன்றுடன் 29 நாட்கள் கடந்த நிலையில், உலகளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக வந்த எந்தப் படமும் சிவகார்த்திகேயனுக்கு ரூ.150 கோடியை கூட நெருங்கியதில்லை. அவ்வகையில், ‘அமரன்’ படம் மூலம் சிவகார்த்திகேயன் மாஸ் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், விக்ரம், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரது வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இதுவரையில், அமரன் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் என்று எதுவும் வந்ததில்லை.
இராணுவ வீரர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படம், திரையரங்குகளில் வெற்றி கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது ஓடிடிக்கும் வந்துள்ளது. வரும் டிசம்பர் 5-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. நெட்பிளிக்ஸ் தளத்தில் அமரன் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள், நடிகர்கள், இராணுவ அதிகாரிகள் என எல்லோருமே படத்தை கௌரவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு, ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமி சார்பில் விருது வழங்கப்பட்டது.
அமரன், படத்தைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே-23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், சிவகார்த்தியை இன்னும் மேலே உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.