இட்லி கடை, பராசக்தி பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்..

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

டாஸ்மாக் மதுபான விற்பனை விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, சென்னையில் உள்ள அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தியது. அதில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமலாக்கத் துறை தெரிவித்தது.

அண்மையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரை அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் சென்றும் விசாரித்திருந்தது.

இதேபோல இட்லி கடை, பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் ரத்தீஷுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தினர். அதில், டாஸ்மாக் விவகாரம் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆகாஷ் பாஸ்கரன் நுங்கம்பாக்கம் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஆகாஷ் பாஸ்கரன் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் ஆகாஷ் பாஸ்கரன் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கலாம் என்றும், டாஸ்மாக் முறைகேடு மூலம் வந்த பணத்தை திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் சந்தேகப்படுவதால், அதுகுறித்து அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்கம் பெற திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ரொக்கமாக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் இருந்து பணம் கைமாறியதற்கான ஆதாரங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே அமலாக்கத் துறை சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஏற்று இவ்வழக்கை நாளை மறுநாள் விசாரணைக்கு பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

producer aakash baskaran over tasmac raid
producer aakash baskaran over tasmac raid