
12 வருடங்களுக்கு பிறகு வந்த ‘மத கஜ ராஜா’ வென்றாரா? நொந்தாரா?: திரை விமர்சனம்
தமிழ்த் திரைப்படத் துறையில், 12 வருடங்களுக்கு முன்பு தயாரித்து முடிக்கப்பட்ட ‘மத கஜ ராஜா’ படம், பற்பல தடைகள் தீர்ந்து.. இன்று திரையரங்குகளில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.
இப்படம், இன்றைய காலத்திற்கும் பொருந்தியவாறு தாக்குப் பிடித்திருக்கிறதா? என்ற விமர்சனம் பார்ப்போம்.
படத்தில், விஷால் (மதகஜராஜா- எம்ஜிஆர்) கேபிள் டி.வி. ஆபரேட்டராக வருகிறார். இவரது நண்பர்களாக சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்களது முன்னாள் விளையாட்டு ஆசிரியரின் மகள் திருமணத்திற்காக மதுரையில் கலகலப்பாய் ஒன்று கூடுகிறார்கள்.
அப்போது, இறுதி ஊர்தி வண்டி உரிமையாளரான சந்தானம் (நந்தகோபால்) தனது மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு உள்ளானதை அறிந்து, விஷால் அதனை சரி செய்கிறார். அதே நேரத்தில் சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா இருவரும் தொழிலதிபர் சோனு சூட்டால் பாதிக்கப்பட்டு கலங்குவதையும் அறிகிறார்.
இந்நிலையில், நண்பர்களுக்காக பணபலம் கொழுத்த, படைபலம் வலுத்த தொழிலதிபர் சோனு சூட்டுவை, சாதாரண ஒரு கேபிள் டிவி ஆபரேட்டராக வரும் விஷால் எதிர்க்கத் துணிகிறார்.
இத்தகைய தன்னலம் கருதாத நட்புக்கு இலக்கணமான போராட்டத்தில்.. விஷால் தனது நண்பர்களின் பிரச்சினையை தீர்த்தாரா? என்பதே மீதிக்கதை.
சுந்தர்.சி இயக்கிய படம் என்றாலே, ஆடியன்ஸ் ஹேப்பிக்கு ஃபுல் கேரண்டி இருக்கும் என்பது தெரிந்ததே. இதில், ஓவர் கிளாமரும் மிக்ஸ் ஆகி.. செம ராவாக தெறிக்க தெறிக்க சிரித்து புரள விட்டுவிட்டார்.
தீராத வியாதி தீர அருமருந்தாக வந்தது போல, சந்தானம்- மனோபாலா கூட்டணி வேறு. அதாவது, கனத்த கவலையோடு வந்தவர்களையும் பெருத்த சிரிப்பு மழையில் உட்கார வைத்து; சந்தோஷ ஜலதோஷமே பிடித்து விட்டது.
மேலும், கேமியோ ரோலில் ஜமாய்த்திருக்கும் நடிகர் ஆர்யாவை ‘ஆன்ட்டி லவ்வர்ஸ்’ என சந்தானம் கலாய்ப்பதில், தியேட்டரை சிரிப்பலையில் அதிர்கிறது.
மறைந்தும் நினைவில் மறையாத நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபுவையும் தற்போது திரையில் காண்பது திரை ஆர்வலர்களுக்கு தெவிட்டாத ஆறுதல் காட்சிகள்தான்.
பொதுவாக, இன்றைய டிஜிட்டல் காலகட்டத்திற்கு ஏற்பவும் ஒளிப்பதிவு அமைந்திருப்பது அவசியம் பாராட்டுக்குரியது.
தற்போது ஹீரோவாக தொடர்ந்திருக்கும் விஜய் ஆண்டனியின் இசையில், அதிரி புதிரியான துள்ளல் மெட்டில் பாடல்கள் ஆட்டம் போட வைத்திருக்கின்றன. போதாததற்கு, கஞ்சத்தனம் இல்லாமல் கவர்ச்சியை வழங்குவதில் வள்ளல்களாய் வரலட்சுமியும் அஞ்சலியும் வரிந்து கட்டி, போட்டி போட்டு இருக்கிறார்கள்.
ஆக, இதிலிருந்து என்ன தெரிகிறது? இப்படம், ஆவணப்படமோ ஆபாச படமோ அல்ல; அதற்காக ஆகாத படமும் அல்ல; “எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்ச சங்கதி தான்” என்ற வகையில், பக்கா கமர்ஷியல் மூவி. அதான் சார்.. நோ லாஜிக், ஒன்லி பியூட்டி பிளஸ் லூட்டி வர்றே வா.. என்ஜாய் சினிமாட்டிக்.!
சுருக்கமாக சொன்னால், விஷால் இன்று ‘சத்யம்’ தியேட்டரில் ‘மத கஜ ராஜா’ படம் பார்க்க வந்திருந்தார். அரங்கினுள்ளே படம் பார்த்த ரசிகர்களின் சந்தோஷ ஆர்ப்பரிப்பால், “அவர்” மீண்டு(ம்) வந்து.. ‘ஆம்பள’ என விரைவில் ஒரு செம எனர்ஜி மூவி படைப்பார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்; வெல்கம் விஷால்.!

மத கஜ ராஜா திரை விமர்சனம்
- Rating