KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ பூஜையுடன் தொடக்கம்!

பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது.
இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து வயதினராலும் விரும்பி விளையாடப்படும் பேட்மிண்டன் விளையாட்டு இதுவரை பெரிய அளவில் திரையில் பிரதிபலிக்கப்படவில்லை. அந்த குறையை போக்கும் விதமாக இளமை, காதல், விளையாட்டு உணர்வுகள் கலந்து உருவாகும் படமாக ‘ரீமேட்ச்’ உருவாகியுள்ளது.
‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘காந்தி கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பாலா, தனது சமூக சேவைகளாலும் ரசிகர்களிடம் தனி இடம்பிடித்துள்ளார். பல கதைகள் கேட்ட பிறகு, பேட்மிண்டனுடன் உள்ள தனிப்பட்ட நெருக்கம் காரணமாக ‘ரீமேட்ச்’ படத்தை தேர்வு செய்துள்ளார். பள்ளி நாட்களிலிருந்தே பேட்மிண்டன் வீரராக இருந்த அவர், மாநில அளவிலான போட்டியிலும் சாதனை படைத்த அனுபவம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் மூலம் தானு ஹர்ஷா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நாடக கலைஞர் மற்றும் மாடலாக அறியப்படும் இவர், சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையுமாவார்.
மேலும் இளவரசு, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், CELL முருகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.
இப்படத்தை BOFTA திரைப்படக் கல்லூரியில் விருது பெற்ற மாணவரும், இயக்குநர் ராதா மோகனின் இணை இயக்குநராக பணியாற்றியவருமான அறிமுக இயக்குநர் ஆர். விமல் குமார் எழுதி இயக்குகிறார்.
இசை – அச்சு ராஜாமணி, ஒளிப்பதிவு – அர்வி, படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த், கலை இயக்கம் – பா. மகேந்திரன், உடை வடிவமைப்பு – அனுஷா ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
Zinema Media and Entertainment Ltd சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கும் இப்படத்தை, தயாரிப்பாளர்கள் பிரகாஷ் சேஷாத்ரி மற்றும் G. ரவி குமார் இணைந்து தயாரிக்கின்றனர். Creative Entertainers & Distributors நிறுவனத்தின் G. தனஞ்செயன் க்ரியேட்டிவ் மற்றும் லைன் புரொடக்ஷன் பணிகளை கவனிக்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
தமிழ் திரையுலகின் பல பிரபலங்கள் கலந்து கொண்ட பூஜை விழாவுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது. இதில் கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர். கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர், சரிகம ஆனந்த், குக் வித் கோமாளி ஜோஷ்வா, KPY தாம்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரே கட்டமாக நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு 2026 அக்டோபருக்குள் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது. காதல், விளையாட்டு, உணர்வுகள் மற்றும் இன்றைய தலைமுறையின் உறவுகளை இணைத்து உருவாகும் ‘ரீமேட்ச்’, பேட்மிண்டனின் உற்சாகத்தை பெரிய திரையில் புதுமையாக கொண்டு வரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
