‘ராமாயணா’வில் தசரதராக அருண் கோவில்.. வெளியானது புதிய போஸ்டர்!

Web Ads

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், ராமரின் தந்தையும் அயோத்தி மன்னருமான தசரதர் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் கோவில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய ரசிகர்களால் ராமர் கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலமாக அறியப்படும் அருண் கோவில், தற்போது அதே காவியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தசரதர் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், தசரத மன்னருக்கே உரிய கம்பீரமான தோற்றத்தில் அருண் கோவில் காட்சியளிக்கிறார். அவரது ஆடை மற்றும் தோற்றம் அயோத்தி மன்னரின் அதிகாரத்தையும் கம்பீரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

படக்குழு தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஒரு தலைமுறைக்கே ராமராக இருந்த அருண் கோவில் தற்போது அயோத்தி மன்னர் தசரதராக ‘ராமாயணா’ உலகிற்கு மீண்டும் திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.

Web Ad 2

நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், DNEG மற்றும் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

‘ராமாயணா’ முதல் பாகம் நவம்பர் 5, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது.