Web Ads

என் தாயும் மறைவும், தங்கையின் ஆறுதலும்: ஜான்வி கபூர் பேச்சு, வைரல்..

இன்று அன்னையர் தினம். இதனை முன்னிட்டு, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் நெகிழ்ச்சியான பேச்சு வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்..

ஸ்ரீதேவியின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தனக்குள் ஏற்பட்ட வெறுமையை விவரித்த ஜான்வி, ‘என்ன நடக்கிறது, இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்தேன். ஆனால், என் தங்கை குஷி, என்னைவிட இளையவளாக இருந்தும், என்னைத் தேற்றுவதற்காகத் தானே அழாமல் இருந்தாள். அவள் என்னைவிட மிகவும் துணிச்சலாகவும், முதிர்ச்சியுடனும் நடந்துகொண்டாள்.

தங்கையின் இந்த எதிர்பாராத துணிச்சலும், ஆதரவும் அந்த நேரத்தில் தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. தாயின் மறைவுக்குப் பிறகு, எனக்கும், தங்கை குஷிக்கும், தந்தை போனி கபூருக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுவடைந்தது.

அந்த சம்பவத்திற்குப் பிறகு, எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமானோம். என் தந்தை மற்றும் தங்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்ந்தேன். குறிப்பாக குஷி, அவள் மிகவும் இளையவள், அவளைப் பாதுகாக்க வேண்டும், அவளுக்கு தைரியம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த நேரத்தில் தந்தை போனிகபூர் கூட, மனரீதியாக என்னைச் சார்ந்திருந்தார்’ என ஜான்வி கூறியுள்ளார்.

பிப்ரவரி 2018-ல் துபாயில் ஸ்ரீதேவி காலமானார். இந்த சோகச் சம்பவம் நடந்து சில மாதங்களிலேயே, ஜூலை 2018-ல், ஜான்வியின் முதல் படம் ‘தடக்’ வெளியானது. தாயின் கனவை நனவாக்கும் பொறுப்பு ஜான்விக்கு இருந்தது. தாயின் இழப்பின் மத்தியில் தனது முதல் படத்தின் வெற்றியைக் காண வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

குடும்பத்தின் ஆதரவு மற்றும் தனது தொழில்முறைப் பற்று காரணமாக அவர் அந்த சூழ்நிலையை தைரியமாக எதிர்கொண்டார். இந்த சம்பவம் தனது வாழ்க்கையைப் பற்றிய பார்வையையே மாற்றியமைத்ததாக ஜான்வி பலமுறை கூறியுள்ளார். தாயின் நினைவுகள் எப்போதும் தன்னுடன் இருக்கும் என்றும், அவரது ஆசீர்வாதம் தன்னை வழிநடத்தும் என்றும் ஜான்வி நம்புகிறார்.

ஸ்ரீதேவியின் மறைவு ஜான்வி கபூரின் வாழ்க்கையில் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருந்தாலும், குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக தங்கை குஷியுடனான அவரது பிணைப்பும், பரஸ்பர ஆதரவும், அந்தக் கடினமான சோகத்தை எதிர்கொள்ள அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

janhvi kapoor recalls sisters support after sridevi death
janhvi kapoor recalls sisters support after sridevi death