‘ஜனநாயகன்’ படம் தெலுங்குப் பட ரீமேக் இல்லை: வைரலாகும் தகவல்..
விஜய் நடிக்கும் கடைசிப்படமான ‘ ஜனநாயகன்’ பற்றி அப்டேட்ஸ் பார்ப்போம்..
தளபதி விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘ஜனநாயகன்’ படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, இது பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ பட ரீமேக் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை. அப்படத்தின் ஒரு காட்சியை மட்டும் பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குறிப்பிட்ட காட்சிக்காக, அப்படத்தின் ஒட்டுமொத்த ரீமேக் உரிமையையும் 4.5 கோடி ரூபாய்க்கு ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய், பகவந்த் கேசரி படத்தைப் பார்த்தபோது, அதில் வரும் ‘குட் டச் பேட் டச்’ காட்சி அவரை மிகவும் கவர்ந்ததாகவும், இதனால், அதை ஜனநாயகனில் சேர்க்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் ஸ்ரீலீலா நடித்த அந்தக் காட்சி, ஜனநாயகனிலும் இடம்பெற உள்ளது. இந்த ஒரே ஒரு காட்சியை தவிர, பகவந்த் கேசரிக்கும் ஜனநாயகனுக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ரசிகர்களால் இத்தகவல் வைரலாகி வருகிறது. இப்படம், அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில், TVK என்ற விஜய் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்ற பெயரில் நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
