அஜித்-விஜய் படங்களுக்கு இசையமைக்க சாம்.சிஎஸ். ஆர்வம்..

தமிழ் சினிமாவில் ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சாம் சி.எஸ். இதனைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார். மேலும் இந்தி, தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
அடுத்து அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்துப் பேசிய சாம் சி.எஸ், ‘அஜித்துடன் பணிபுரிய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆனால், நான் அஜித் சாருடன் கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவேன்.
நான் அவருடைய தீவிர ரசிகன். அவரை ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு மனிதராகவும் எனக்குப் பிடிக்கும். அவர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி. தளபதி விஜய்யுடனும் பணியாற்ற விரும்புகிறேன், ஆனால், அவர் மீண்டும் நடிப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று நம்புகிறேன்’ என்றார்.
அஜித், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படமாக ‘ஜனநாயகன்’ ஜனவரி 19-ந்தேதி ரிலீஸாகிறது. இதனைத் தொடர்ந்து அவர் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.
