
ஷங்கரின்’ கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் அதிர்ச்சி பதிவு..
3 வருடம் அயாராது உழைத்து உருவாக்கப்பட்ட ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து, தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் 2’ ரிலீஸாகி அதிக ட்ரோல்களை சந்தித்தது. இதனையடுத்து, தற்போது தமிழ், தெலுங்கு மொழியில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸாகியுள்ளது.
ராம்சரண், எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, சுனில், ஜெயராம் உள்பட பலர் நடிப்பில் உருவான இப்படத்தை தில் ராஜு தயாரித்தார்.
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ரிலீஸான முதல் நாளே சட்டவிரோதமாக இணையதளங்களில் ரிலீஸாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில், இப்படம் தெலுங்கு லோக்கல் சேனல்களில் ஒளிபரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச குமார் தனது எக்ஸ் தளப் பதிவில்,
‘ஏற்றுக்கொள்ள முடியாதது இது. 4-5 நாட்களுக்கு முன்பு வெளியான ஒரு படம் உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும், பேருந்துகளிலும் ஒளிபரப்பாகிறது. இது மிகுந்த கவலைக்குரியது.
சினிமா என்பது ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர்களை சார்ந்தது மட்டுமல்ல. 3-4 ஆண்டுக்கால கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் கனவாகும்.
படங்களின் வெற்றியை சார்ந்து வாழும் விநியோகஸ்தர்கள் இந்த மாதிரி செயலால் எந்தளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை சிந்தியுங்கள். அத்துடன் திரைப்படத்துறையின் எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது’ என தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
