
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபர்; 24 மணிநேரத்தில் கைது; விசாரணை விவரம்..
பாலிவுட் முன்னணி நடிகர் சயீப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை, மும்பை போலீஸார் துரித நடவடிக்கையில் விரைந்து கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:
சயிப் அலிகான், நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர், மும்பையில் பந்த்ராவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
ஜனவரி 16-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சயிப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர் சயிப் அலிகானை மீட்டு அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சயிப் அலிகான், தற்போது அறுவை சிகிச்சை செய்த பின்னர் ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சயிப் அலிகானை அந்த கொள்ளையன் ஆறு முறை கத்தியால் குத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர், 35 டூ 40 வயது இருக்கும் என்றும், அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சயிப் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்ததாகவும், சயிப் மீது தாக்குதல் நடத்தும் முன், வீட்டு ஊழியர்களை மிரட்டி ரூ.1 கோடி கேட்டிருக்கிறார்.
அப்போது அவரை காப்பாற்ற வந்தபோது தான் சயிப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றிருக்கிறார்.
சயில் வசிக்கும் 12-வது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக கொள்ளையன் இறங்கும்போது, அங்குள்ள சிசிடிவி கேமராவில் அவனது முகம் தெளிவாக பதிவாகி இருந்தன. அதை வைத்து தாக்குதல் நடத்தியவனை பிடிக்க மும்பை போலீசார் உடனடியாக 20 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சயிப் வீட்டு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வீட்டு ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
குற்றவாளியை பிடிக்க போலீசாருக்கு சிசிடிவி பெரும் உதவியாக இருந்துள்ளது. அதை வைத்து 24 மணி நேரத்தில் அவனை தூக்கியுள்ளது மும்பை போலீஸ். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.
