என் மகனை காணாமல் தேடினேன், கலங்கினேன்: மாரி செல்வராஜ் அதிர்ச்சி தகவல்
‘வாழை’ படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்நிலையில், தான் ஜப்பானுக்குச் சென்றபோது நடந்த நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் தெரிவிக்கையில்,
‘எனது குழந்தைகளுக்கு பெயர் வைத்தது (இயக்குனர்) ராம் சார் தான். அவர் வாரத்திற்கு ஒரு முறையாவது போன் செய்து எனது மகன் குறித்து விசாரிப்பார். மேலும், அவரது மகன் குறித்து பல விஷயங்களைப் பேசுவார்.
இதனால், எனக்கும் ஆசையாக இருக்கும். நாம் எப்போது நமது மகன் குறித்து ராம் சாரிடம் பெருமையாக பேசப்போகிறோம் என. சமீபத்தில் நான் குடும்பத்துடன் ஜப்பானுக்குச் சென்றிருந்தேன். அப்போது, மகனை அவனது பாட்டியுடன் ஒரு அறையில் தூங்க வைத்துவிட்டு நண்பர் ஒருவரைப் பார்க்க நாங்கள் அனைவரும் புறப்பட்டு விட்டோம்.
நாங்கள் திரும்பி வரும்போது, எனது மனைவியின் அம்மா போன் செய்து மகனைக் காணவில்லை என்று சொல்லி அழுகிறார். அறைக்குள் தூங்கிக் கொண்டு இருந்த பையன் எப்படி காணாமல் போவான் என்ற கேள்வியும், அதுவும் ஜப்பானில் எப்படி காணாமல் போவான் என்றும் கேள்வி எழுந்தது.
எனது மகனுக்கு ஒரு அறைக்குள்ளோ, ஒரு லிஃப்ட்க்குள்ளோ செல்லத் தெரியும். ஆனால், வெளியே வரத் தெரியாது. அவனது பாட்டி போன் செய்து அழுது கொண்டே இருக்கிறார். எனது மனதிற்குள் பயம் தொற்றிக் கொண்டது. சரி வாழ்வில் ஒரு பெரிய துயரத்திற்கு நாம் தயாராக வேண்டியதுதான் என மனதிற்குள் தோன்றுகிறது.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்ததும், ஹோட்டலின் வரவேற்பறையில் இரண்டு பெண்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்தான். நான் அவனைப் பார்த்ததும் ஓடிச் சென்று தூக்கி விட்டேன். அவன் கண்களில் கண்ணீர் இருந்ததை நான் பார்த்தேன்.
அறையில் இருந்தவன் இங்கு எப்படி வந்தான் என்றால், அறையில் தூங்கிக் கொண்டு இருந்தவன், தான் அணிந்திருந்த பேம்பர்ஸை கழட்டிவிட்டு சட்டை , பேண்ட் மற்றும் ஷூ போட்டுக் கொண்டு அறையில் இருந்து வெளியேறியுள்ளான். அதன் பின்னர், நான் தங்கியிருந்த அறையை திறக்க முயற்சி செய்துள்ளான். அந்த அறை பூட்டியுள்ளது.
அதேபோல், பாட்டி தூங்கிக் கொண்டு இருந்த அறையையும் திறக்க முயற்சி செய்துள்ளான், திறக்க முடியவில்லை. இதனால், அந்த வளாகம் முழுவதும் இருந்த அறைகளைத் தட்டியுள்ளான். இதனால், ஒரு அறையில் இருந்து வெளியே வந்த இரண்டு பெண்கள் அவனிடம் யார் என்று கேட்டதற்கு, அவர்களிடத்தில் பேப்பரில் டைரக்டர் மாரி செல்வராஜ் என எழுதிக் கொடுத்துள்ளான். அதன் பின்னர் அவர்கள் அவனை கீழே வரவேற்பறைக்கு அழைத்துவந்து, விசாரித்துள்ளார்கள்.
நாங்கள் வந்திருப்பதை உறுதி செய்த பின்னர் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார்கள். இது தொடர்பாக நான் பெருமையாக என் மகன் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளான் என்பதை ராம் சாரிடம் கூறினேன். உடனே அவர் சொன்னது, இனிமேல் உனது சினிமா மாறும், மற்றவர்கள் மீது நம்பிக்கை வரும் என்றார்’ என மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.