Web Ads

‘2K லவ் ஸ்டோரி’ திரைப்படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் விளக்கம்

தனது இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் பற்றி சுசீந்திரன் பேசியுள்ளார். அது குறித்துப் பார்ப்போம்..

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என வெற்றிப் படங்களை கொடுத்தவர் சுசீந்திரன். இவர் தற்போது இயக்கியுள்ள படம், 2கே லவ் ஸ்டோரி.

இப்படத்தில் ஜெகவீரா நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், வினோதினி என பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 14-ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

திருமண விழாவில், புகைப்படம் எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் பற்றி சுசீந்திரன் தெரிவித்ததாவது:

‘மனதிற்குள் காதல் வருவதற்கு முன், காமம் வருவது தான் மனித இயல்பு. ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே இதுதான் நடந்து வருகிறது. இதைத்தான் இந்த 2k லவ் ஸ்டோரி திரைப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.

இந்த உலகம் பார்ப்பது போல நாங்கள் ஏன் வாழ வேண்டும். நாங்கள் நண்பர்கள், இத்தனை வருடம் அவனுடன் நான் பழகினேன் எங்களுக்குள் எந்த ஒரு எண்ணமும் வந்ததில்லையே அது தான் நட்பு.

எந்த ஒரு ஆணுக்கும், பெண் மீது காதல் வருகிறது என்றால் அதற்கு முன் காமம் வருகிறது என்றுதான் அர்த்தம். காமத்திற்கு பிறகு தான் திருமணமே நடக்கும்.

இன்றைய காலத்தில் பாய் பெஸ்டீ என்கிறார்கள், அது அந்த காலத்தில் இருந்தே இருக்கிறது. ஆனால், அதற்கு பெயர் வைக்காமல் இருந்தார்கள். எல்லா காலத்திலும், எல்லா உறவும் இருந்துள்ளது. இப்போது தான் அதற்கு ஒரு பெயர் வைத்து அடையாளப்படுத்துகிறார்கள், அதற்கு காரணம் மீடியாக்கள்.

இந்த காலகட்டத்தில் சோசியல் மீடியாக்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால், 2கே கிட்ஸ் தான் மோசமானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

நான் சிறு வயதில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது என்னுடைய அம்மா ‘டிவி பார்த்தே கெட்டுப் போகிறாய்’ என்று சொல்வார்கள். இப்போது, ‘மொபலைப் பார்த்து கெட்டு போகிறார்கள்’ என்கிறார்கள்.

எல்லா காலகட்டத்திலும் பாசிட்டிவ்வான பக்கங்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது, பாசிட்டிவாகவும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாத்தையும் நாம் நெகட்டிவ் ஆக பார்க்க கூடாது. இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பல நல்ல விஷயங்களை இந்த சமுதாயத்திற்கு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த 2கே லவ் ஸ்டோரி படத்தை இயக்கி இருக்கிறேன்.

எப்போதுமே நான் கதை எழுதும்போது, நடிகர்களை முடிவு செய்துவிட்டு எழுத மாட்டேன். கதை எழுதிய பிறகு தான் நடிகர்களை தேர்வு செய்வேன். இந்த கதைக்கு கல்லூரி படிப்பை முடித்த ஒரு இளைஞர் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக புது முகங்களை நடிக்க வைத்தேன்’ என்றார்.