Web Ads

சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: பரபரப்பு; போலீஸ் விசாரணை

மும்பை வொர்லியில் உள்ள போக்குவரத்து துறைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில், நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சல்மான் கானின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்றும் சல்மானை கொலை செய்வோம் என்றும் அந்த மெசேஜில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக சல்மான் கானுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல்கள் வந்துள்ளன. 1998-ம் ஆண்டு மான் வேட்டை வழக்கில் சல்மான் கானை குறிவைத்து இந்த கும்பல் தாக்குதல் நடத்தப்போவதாக அடிக்கடி மிரட்டல் வருகிறது.

பிஷ்னோய் சமூகத்திற்கு கருப்பு மான் மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. அதை வேட்டையாடியதால் சல்மான் கானை அந்த சமூகத்தினர் டார்கெட் செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு சல்மானின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், தற்போது அதே ஏப்ரல் 14-ந் தேதி புதிய மிரட்டல் வந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் தான் சல்மான் கானும் அவரது குடும்பத்தினரும் வசிக்கும் கேலக்ஸி அபார்ட்மெண்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தபோது பட்டாசு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டதாக சல்மான் கூறினார். தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்ய அவர்கள் முயற்சிப்பதாக சல்மான் கூறினார்.

பின்னர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின், லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஃபேஸ்புக் பதிவில் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றார்.

மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சல்மானின் வீட்டின் வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் போலீசார் 1,735 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

விக்கி குமார் குப்தா, சாகர் குமார் பால், சோனு குமார் பிஷ்னோய், அனுஜ் குமார் தாபன், முகமது ரஃபீக் சவுத்ரி, ஹர்பால் சிங் ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.  கைதுக்குப் பிறகு போலீஸ் காவலில் அனுஜ் குமார் தற்கொலை செய்து கொண்டார். மற்ற ஐந்து பேரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர்.

bomb warning for actor salman khan police files case