‘பேபி ஜான்’ படத்தால், தயாரிப்பாளர் அட்லிக்கு லாபமா? நட்டமா?
ஒரு கோலிவுட் டைரக்டர், பாலிவுட்டில் புரொடியூசராக களம் இறங்கி ஆதாயம் பார்த்தாரா? என பார்ப்போம்..
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளிவந்த ‘பேபி ஜான்’ படம் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமான அட்லி, இப்படத்திற்கு செம புரோமோஷன் செய்தது தெரிந்ததே.
‘பேபி ஜான்’ படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, சல்மான்கானும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனால், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸானது.
ஆனால், படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் பாக்ஸ் ஆபிஸில் சோர்ந்து போய் உள்ளது.
அதாவது, விஜய் நடித்த ‘தெறி’ படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ரிலீஸாகி 4 நாட்களில் ரூ. 23.90 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
இந்நிலை நீடித்தால் இப்படம் ரூ.60 கோடி மட்டுமே வசூலிக்கும் என கூறப்படுகிறது. இதனால், இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக திரைவட்டாரம் தெரிவிக்கிறது. இச்சூழலில், இது குறித்து அட்லி வெளிப்படையாக தகவல் ஏதும் சொல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.