“உங்க கவர்ச்சி மட்டும் அரசியல் இல்ல”: விஜய்யை கடுமையாக விமர்சித்த இயக்குநர் சேரன்!

சமீபத்தில் நாம் தமிழர் கட்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்த இயக்குநர் சேரன், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நோக்கி தனது எக்ஸ் (X) தளத்தில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சேரன் எழுப்பியுள்ள முக்கியக் கேள்விகள்:

  • திட்டங்கள் என்ன?: “புதிதாகக் கட்சி ஆரம்பித்து ஓட்டு கேட்க வந்தால், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் என்ன திட்டங்கள் உள்ளன என்பதைப் பேச வேண்டும். அதை விடுத்து ‘ஸ்டாலின் வேணுமா அல்லது நான் வேணுமா?’ எனக் கேட்பது நாட்டை ஆளத் தகுதியாகுமா?” எனச் சேரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • மக்கள் போராட்டம்: “எந்தப் போராட்டத்திலாவது மக்களுக்காக நீங்கள் களத்தில் நின்றிருக்கிறீர்களா? உழைப்பை மதியுங்கள், உங்களது சினிமா கவர்ச்சி மட்டுமே மக்களுக்கான அரசியல் கிடையாது” எனச் சாடியுள்ளார்.

  • அரசியல் முதிர்ச்சி: “சினிமா வசனம் பேச இது ஒன்றும் அரட்டை அரங்கம் அல்ல, மக்கள் களம். 15 ஆண்டுகளாக மக்களுடன் நின்று போராடும் கட்சிகளை விட நீங்கள் எந்த விதத்தில் உயர்வு?” என்றும் அவர் கேட்டுள்ளார்.

  • ஆட்டத்தைக் கலைக்காதீர்கள்: “ஏற்கனவே 50 ஆண்டுகளை இழந்து நிற்கிறோம். இப்போது நீங்கள் வந்து ஆட்டத்தைக் கலைக்க வேண்டாம். மக்கள் பிரச்சினையை உணராத முதல்வர் எங்களுக்குத் தேவையில்லை” எனத் தனது பதிவில் ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது பரப்புரை பாணி குறித்து இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள இந்த விமர்சனம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cheranelection 2026tvkvijay