ஃபேமிலி பாய் படத்தின் முதல் பாடல் தீராகணம் வெளியீடு!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஃபேமிலி பாய்’ (Family Boy). இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான ‘தீராகணம்..’ பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளன.

இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள்தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் ஜே.பி. இசையமைத்துள்ளார். ஜிஜேந்திரன்.வி படத்தொகுப்புப் பணிகளையும், சி.கே. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

உண்மைச் சம்பவத்தைத் தழுவி, குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக ‘ஃபேமிலி பாய்’ தயாராகியுள்ளது. மெக்கானிக் பிக்சர்ஸ் (Mechanic Pictures) சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ள இப்படத்தை, மில்லினியல்ஸ் மூவி புரொடக்‌ஷன் LLP (Milliennials Movie Production LLP) சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தை பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

- Advertisement -

இப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ‘தீராகணம்..’ என்ற முதல் பாடலும் அதன் லிரிக்கல் வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

‘சரியா.. சதியா.. நீ என் சகி.. மதியா.. விதியா.. நீ கண்மணி.. இறையா.. இரையா.. இதயம் நீயா..’ எனத் தொடங்கும் இப்பாடலை இயக்குநர் மித்துன் மாணிக்கம் எழுதியுள்ளார். பின்னணிப் பாடகர் ஆதித்யா RK, பாடகிகள் மால்வி சுந்தரேசன் மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். காதல் உணர்வுகளை மையமாகக் கொண்ட மெலோடி பாடலாக உருவாகியுள்ள ‘தீராகணம்’, இசை ரசிகர்களையும் இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக, லிரிக்கல் வீடியோவின் தொடக்கத்தில் இடம்பெறும் ‘அணுவும் அண்டமும்… அவளும் யானும்… அனைத்தும் காதலே… அவள் என் தீராகணமே…’ என்ற கவிதை வரிகள் பாடலுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. நடிகர் சூர்யாவால் அடையாளம் காணப்பட்ட திறமைசாலியான மித்துன் மாணிக்கத்தின் எழுத்தாற்றலையும் இந்த வரிகள் வெளிப்படுத்துகின்றன. முதல் பாடலாக வெளியாகியுள்ள ‘தீராகணம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Family BoyTheeraganamTheeraganam the First Single from Family Boy Released