டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இந்த படம், வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என டீசர் காட்டுகிறது.

வெளியான டீசர் முழுவதும் அதிரடி சண்டைக் காட்சிகளால் நிரம்பியிருக்கிறது. இது ஒரு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன் கதையாக உருவாகியிருப்பது தெளிவாகிறது. மலையாள திரையுலகை மட்டுமல்லாமல், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இந்த படம் முக்கிய இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான ‘காட்டு செம்பகம்’ பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தப் பாடலை அகில் ஜே. சந்த் மற்றும் அவனி மல்ஹார் இணைந்து பாடியுள்ளனர். பாடல்வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார்.

டீசரில் டொவினோ தாமஸுடன் விஜயராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கு முன் படக்குழு வெளியிட்ட குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘பள்ளிச்சட்டம்பி’ படம், டிஜோ ஜோஸ் ஆண்டனி – ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம். இவர்களின் முந்தைய படங்களான ‘குயின்’, ‘ஜன கண மன’, ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ஆகியவற்றின் பாடல்கள் அனைத்தும் பெரிய வெற்றி பெற்றுள்ளன. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், இந்த படம் IMDb-யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ‘ஜன கண மன’ படத்தை இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு கதை எழுதியுள்ள இந்தப் படத்திற்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ் தயாரிக்க, சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சாணக்யா சைதன்ய சரண் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

Dijo Jose AntonyPallichattambhiThe teaser of PallichattambhiTovino Thomas