தமிழ் சினிமாவில் செம்பருத்தி, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். அவ்வகையில், அவரது இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம், விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி தியேட்டரில் தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், ஆர்.கே.செல்வமணி, தன் மனைவி ரோஜா மீதான காதல் குறித்தும், குழந்தைகள் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‘நான் சம்பாதித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இப்போதும், அதே மரியாதை அதே அன்பு இருக்கிறது என்றால், அதற்கு காரணம் ரோஜா என் மீது வைத்திருக்கும் காதல் தான்.
பல நேரங்களில் பலபேரை பார்த்து இருக்கிறேன். பொருளாதாரத்தில் அவர்களின் நிலைமை சற்று சரியும்போது வீட்டில் அவர்களுக்கான மரியாதை குறைந்து விடும். ஆனால், இன்றுவரை என்னுடைய குடும்பத்தில் அந்த பிரச்சினை வந்ததே இல்லை.
2010 ஆம் ஆண்டு தான் நான் கடைசியாக படத்தை இயக்கினேன். அதன் பிறகு நான் எந்த படத்தையும் இயக்கவே இல்லை. ஆனாலும், எனக்கு அதே அன்பு இப்போதுவரை கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
குடும்பத்திற்குள் வேறு சில பிரச்சினைகள் வரும், கருத்து மோதல்கள் வரும், அது எல்லாம் சாதாரணமான விஷயம். ஆனால், பண விஷயத்தில் எங்களுக்குள் கருத்து மோதல் வந்ததே இல்லை. அதற்கு காரணம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல், புரிதல்தான்.
ரோஜாவுடன் திருமணம் நடந்து 23 வருடம் ஆகிவிட்டது, அதற்கு முன்பாகவே 8 ஆண்டுகள் காதலித்தேன். ஏறக்குறைய 30 வருடங்களாக இருவரும் ஒன்றாக பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
விஜயகாந்த் சினிமாவில் எனக்கு எப்படி பக்கபலமாக இருந்து கை கொடுத்து உதவினாரோ, அதேபோல என்னுடைய வாழ்க்கையில் ரோஜா இருக்கிறார். ரோஜா என்பவர் வெறும் நடிகையாக இல்லாமல், எனக்கு மனைவியாக, தோழியாக என்னுடன் எப்போதும் பயணம் செய்து கொண்டிருக்கிறாள்.
என்னுடைய மகள் கூட எதற்கு அப்பா இரவு பகலாக சம்பாத்தியமே இல்லாமல், அதற்கு செல்ல வேண்டும் என கேட்பாள். ஆனால், என் மனைவி ஒருநாளும் அப்படி கேட்டதே இல்லை. ரோஜாவைப் போலத்தான் என் மகளும் என் மீது மிகவும் அன்பு பாசம் கொண்டவளாக இருக்கிறாள். இப்போது அமெரிக்காவில் படித்துக்கொண்டு இருக்கிறாள். என் மகன் தற்போது லயோலா கல்லூரியில் பிபிஏ படித்துக்கொண்டு இருக்கிறார்.
அவருக்கு, பல படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நானும் உனக்கு விருப்பம் இருந்தால் நடி என்று சொன்னேன். ஆனால், என் மகனுக்கு நடிப்பதில் விருப்பமில்லை என கூறி விட்டான். அவர்களுக்கு என்ன விருப்பமோ அதை செய்யட்டும் என்று விட்டு விட்டேன் என தெரிவித்துள்ளார் ஆர்.கே.செல்வமணி.