மோகன்லால் நடிப்பில், இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
இயக்குநர் விஷ்ணு மோகனின் மூன்றாவது படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது ‘ஆபரேஷன் கங்கா’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு மோகன் இயக்குநராக அறிமுகமான ‘மேப்படியான்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
### உக்ரைன் போர் பின்னணியில் உருவாகும் கதை
ரஷ்யா – உக்ரைன் போரின் பின்னணியில், உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆபரேஷன் கங்கா’ மீட்புப் பணியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. மோகன்லால் விரைவில் படப்பிடிப்பில் இணையவுள்ளார். மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போலந்து, ஜார்ஜியா, கஜகஸ்தான், டெல்லி, டேராடூன் மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
மோகன்லாலுடன் பாலிவுட் நடிகர்கள் அர்ஜுன் ராம்பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெளிநாடு மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
- Advertisement -
### சர்வதேச தொழில்நுட்பக் குழு
‘துரந்தர்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபல இசையமைப்பாளர் ஷாஷ்வத் சச்தேவ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
‘புஷ்பா 1’, ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மிரோஸ்லாவ் குபா ப்ரோசெக் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘துரந்தர்’, ‘கில்’ உள்ளிட்ட படங்களின் ஆக்ஷன் இயக்குநர் சே யங் ஓ இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
‘GOAT’, ‘மெய்யழகன்’, ‘அமரன்’, ‘கதனார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் புரொடக்ஷன் டிசைனை கவனிக்கிறார். எடிட்டராக ஷமீர் முகமது பணியாற்றுகிறார்.
‘துரந்தர்’, ‘யூரி’, ‘3 இடியட்ஸ்’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிஷ்வதீப் சட்டர்ஜி சவுண்ட் டிசைனராக இணைந்துள்ளார். ‘காந்தாரா’ படத்தின் VFX மேற்பார்வையாளராக பணியாற்றிய கே.வி. சஞ்சித் இப்படத்தின் VFX பணிகளை கவனிக்கிறார்.
மேலும், ‘Safed Sagar’, ‘Border 2’, ‘Fighter’ உள்ளிட்ட படங்களில் மிலிட்டரி ஆலோசகராக பணியாற்றிய Squadron Leader Verlin Panwar, இப்படத்திலும் மிலிட்டரி ஆலோசகராக இணைந்துள்ளார்.
‘Lokah’ படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் மெல்வி ஜே, மேக்கப் கலைஞர் ரோனெக்ஸ் சேவியர், புரொடக்ஷன் கன்ட்ரோலர் ரின்னி திவாகர் உள்ளிட்டோரும் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில் சுரேஷ் கோபி நடிக்கும் ‘ஒட்டக்கொம்பன்’, ஜெயசூர்யா நடிக்கும் ‘கதனார்’ மற்றும் எஸ்.ஜே. சூர்யா இயக்கும் ‘கில்லர்’ உள்ளிட்ட பிரம்மாண்டமான படங்களும் தற்போது தயாரிப்பில் உள்ளன.