சினிமா துறையின் முக்கிய பிரச்சினைகள்… அமைச்சர் முன் வைத்த தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ஏ. ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தமிழ் திரையுலகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் ஆதரவு மற்றும் தலையீட்டை கோரி TFAPA சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

TFAPA முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்:

*தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 4% உள்ளாட்சி பொழுதுபோக்கு வரியை நீக்குதல்.
*தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளை ஆண்டுதோறும் வழங்குவதுடன், நிலுவையில் உள்ள ஆண்டுகளுக்கான விருதுகளையும் வழங்குதல்.
*சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கான 11 ஆண்டுகால நிலுவை மானியங்களை வழங்குதல் மற்றும் மானியத்தை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்துதல்.
*தமிழ்நாடு முழுவதும் திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு ஒற்றைச் சாளர அனுமதி முறையை அமல்படுத்துதல்.
*ஒவ்வொரு காட்சியின் திரையரங்கு வசூலை தயாரிப்பாளர்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் Movie -Ticket Tracking System-ஐ செயல்படுத்துதல்.
*சிறு முதலீட்டு தமிழ் திரைப்படங்களுக்காக பிரத்யேக OTT தளம் உருவாக்கி, அதற்கு அரசு நிதியுதவி வழங்குதல்.
*திரைப்படத் திருட்டை கட்டுப்படுத்த தனியான Anti-Piracy அமைப்பை உருவாக்குதல்.
*டிஜிட்டல் சினிமா ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும் Virtual Print Fee (VPF)-ஐ நீக்குதல்.
*OTT Window மற்றும் VPF பிரச்சினைகளுக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், *விநியோகஸ்தர்கள் மற்றும் அரசு பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்துதல்.

- Advertisement -

வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு கௌரவம்

TFAPA சார்பில் முதன்முறையாக, அக்டோபர் 2025 முதல் செப்டம்பர் 2026 வரை வெளியான குறிப்பிடத்தக்க மற்றும் வெற்றிகரமான தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் குஷ்பு சுந்தர், சௌந்தர்யா ரஜினிகாந்த், விஜய் ஆண்டனி, கண்ணன் ரவி உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

TFAPA தலைவர் G.K.M. தமிழ்குமரன், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தமிழ் திரைப்படத் துறையின் முக்கிய கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க முன்வந்த அமைச்சர் ஏ. ராஜ்மோகனுக்கு TFAPA சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Key Issues Facing the Film Industry Raised by Producers Before the Ministerrajmohan