கரீனா கபூர் – பிருத்விராஜ் நடிப்பில் ‘டாய்ரா’ டிரெய்லர் வெளியானது!

தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா தலைமையிலான பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், வரும் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘டாய்ரா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. குற்றம், நீதி மற்றும் தண்டனை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு குற்றச் சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெறும் விசாரணையைச் சுற்றியே கதை நகர்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் மூத்த காவல்துறை அதிகாரிகளாக கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ளனர். இருவரும் கடமை மற்றும் நீதியை அணுகும் வெவ்வேறு பார்வைகளைக் கொண்டிருப்பதால், வழக்கின் போக்கு பல்வேறு திருப்பங்களை சந்திக்கிறது.

“உண்மை எப்போதும் முழுமையானதல்ல; நீதியை வெவ்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள முடியும்” என்ற கருத்தை முன்னிறுத்தும் வகையில் டிரெய்லர் அமைந்துள்ளது. புதிய தகவல்கள் வெளிவரும்போது வழக்கைப் பற்றிய பார்வையே மாறும் வகையில், பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் படிப்படியாக அதிகரிக்கிறது.

- Advertisement -

கரீனா கபூர் கான், இப்படத்தில் டிசிபி அஜூனி கோலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிருத்விராஜ் சுகுமாரன் டிசிபி ராமன் குமார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ஜிதேந்திர ஜோஷி, க்ஷிதி ஜோக், கன்வல்ஜீத் சிங், சந்தீப் குல்கர்னி மற்றும் த்ருப்தி கம்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யஷ் கேஸ்வானி, சிமா அகர்வால் மற்றும் மேக்னா குல்சார் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். கருப்பு, வெள்ளை என எளிதில் பிரிக்க முடியாத கதைக்களத்தின் மூலம் சட்டம், நீதி, தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் அவற்றுக்கிடையேயான முரண்பாடுகளை இப்படம் ஆராய்கிறது.

மேக்னா குல்சாருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம் என்றும், படம் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் என்றும் கரீனா கபூர் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் தெரிவித்துள்ளனர்.

‘தல்வார்’, ‘ராஸி’ படங்களைத் தொடர்ந்து மேக்னா குல்சாருடன் ஜங்லீ பிக்சர்ஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பென் மருதர் நிறுவனம் இப்படத்தை விநியோகிக்கிறது.

‘டாய்ரா’ செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

DaayraKareena Kapoor - Prithviraj Starrer Daaira Trailer ReleasedKareena Kapoor KhanPrithviraj Sukumaran